மோடி என்ன அறிவிக்கப் போகிறாரோ.. அச்சத்தில் பல மாநில முதல்வர்கள்.. சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி என்ன அறிவிக்கப்போகிறாரோ என்று அனைத்து மாநில முதல்வர்களும் அச்சத்தில் இருப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றித்தான் டெல்லியில் பேசிக்கொண்டிருப்பதாகவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். கடந்த 1967ஆம் ஆண்டுவரை, நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்து வந்தது. பிறகுதான் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இதனால், ஆண்டில் பல மாதங்கள் தேர்தல் மனநிலையிலேயே கழிந்து விடுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த முடிவது இல்லை.

அடிக்கடி தேர்தல் நடத்துவதால் நிதிச்சுமையும் அதிகரிக்கிறது. பாதுகாப்பு படையினரை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஒதுக்க வேண்டி உள்ளது. இந்த சிரமங்களால், நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. 22ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அத்தொடர் நடக்கும். அதில், முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை அமல்படுத்தும் மசோதாவும் அவற்றில் அடங்கும் என்று தெரிகிறது.
இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினை வந்து விட்டது. இந்த நேரத்தில் மாதம் 1000 ரூபாய் கொடுகிறார்கள். எல்லாம் தேர்தலுக்காக திமுக அடிக்கும் ஸ்டண்ட் இது. முடியாது என்று தெரிந்துமே பல விசயங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து ஓட்டு வாங்கி ஜெயித்தனர்.
இப்போது டெல்லியில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றித்தான் பேசி வருகின்றனர். நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரில் மோடி என்ன அறிவிக்கப்போகிறாரோ என்ற அச்சம் பல மாநில முதல்வர்களிடையே இருப்பதாகவும் கே.டி ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கான பணிகள் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. இதனை கேட்டு பலரும் அச்சமடைந்துள்ளனர். திமுக இப்போது சனாதன பிரச்சினையை கையில் எடுத்துள்ளது என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications