ராஜேந்திர பாலாஜிக்கு குடைச்சல்.. ஆர்பி உதயகுமார் செய்த மூவ்.. பரபரக்கும் விருதுநகர் அதிமுக!
விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் ஆர்பி உதயகுமார் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பேச தொடங்கியுள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரச் செயலாளர் பதவியில் இருந்து இன்பத்தமிழனை ராஜேந்திர பாலாஜி நீக்கிய நிலையில், ஜெயலலிதா பேரவையின் மாநில இணைச் செயலாளர் பொறுப்பை முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழனுக்கு ஆர்பி உதயகுமார் பெற்று கொடுத்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுகவிற்கு அக்னிப் பரீட்சையாக இருக்கப் போகிறது. ஏனென்றால் 1967, 1972 ஆகிய தேர்தலுக்கு பின் திமுக தொடர்ச்சியாக 2 முறை ஆட்சிக்கு வந்தது கிடையாது. அதேபோல் அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதலே 5 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சியாக கம்பேக் கொடுக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்கொண்ட 10 தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

விருதுநகர் அதிமுக
இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். அதற்காகதான் ஜெயலலிதா பாணியில் ஒரு ஆண்டுக்கு முன்பே சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொகுதி வாரியாக மேற்கொண்டிருக்கிறார். இதனிடையே அதிமுக உட்கட்சி பூசலும் உச்சத்தில் இருந்து வருகிறது.
ராஜேந்திர பாலாஜியின் எழுச்சி
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் ஆர்பி உதயகுமார் ஆகியோர் மோதி வருகின்றனர். 2011ஆம் ஆண்டு சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜி வெற்றிபெற்றதில் இருந்து அமைச்சர், மாவட்டச் செயலாளர் என்று அடுத்தடுத்து வளர்ச்சி அடைந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் வைகைச்செல்வன், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோரையும் அசால்ட்டாக ராஜேந்திர பாலாஜி ஓரம்கட்டினார்.
இன்பத்தமிழன் தரப்பு புகார்
இந்த நிலையில் 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இன்பத்தமிழன், தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரச் செயலாளராக இருந்து வந்தார். அண்மையில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் நேரடியாக எடப்பாடி பழனிசாமியிடமே, தேர்தலின் போது ராஜேந்திர பாலாஜி எந்த செலவும் செய்யவில்லை என்று இன்பத்தமிழன் தரப்பில் கூறினர். இது ராஜேந்திர பாலாஜிக்கு பின்னடைவாக அமைந்தது.
ஆர்பி உதயகுமார் குடைச்சல்
இதன் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து இன்பத்தமிழனை எளிதாக கழற்றிவிட்டார் ராஜேந்திர பாலாஜி. ஆனால் ராஜேந்திர பாலாஜிக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இன்பத்தமிழனுக்கு ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்புக்கு கொண்டு வந்துள்ளார் ஆர்பி உதயகுமார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் ஒப்புதல் கொடுத்துள்ளார்.
பின்னடைவு
ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளராக ஆர்பி உதயகுமார் தான். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு இன்பத்தமிழன் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. இதனால் ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ராஜேந்திர பாலாஜி மோதி வருகிறார்.
நீளும் மோதல் பட்டியல்
வைகைச்செல்வன், இன்பத்தமிழன் உள்ளிட்ட உள்ளூர் சீனியர் நிர்வாகிகள் மட்டுமல்லாமல் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரிடம் கூட சில மாதங்களுக்கு முன் மோதி வந்தார். அந்த பட்டியலில் தற்போது ஆர்பி உதயகுமாரும் இணைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் ராஜேந்திர பாலாஜிக்கு சொந்த கட்சியிலேயே பல்வேறு சிக்கல் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications