அரசியல் அறிவே இல்லாத அட்டை.. அவர்களால் எந்த பலனும் இல்லை.. விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி!
விருதுநகர்: தமிழ்நாட்டில் அரசியல் அறிவே இல்லாத அட்டைகள் என்னதான் உளறினாலும், புலம்பினாலும் களத்தில் திமுகவே வெல்லும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் எந்த அமைப்பு பலமும், கொள்கையும், லட்சியமும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த கூட்டத்தால் அவர்களுக்கும் பயனில்லை.. யாருக்கும் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக இளைஞரணியின் நிர்வாகிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. தென் மண்டலத்தைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் இருந்து இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ள மாநாடு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்த மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டை மிஞ்சும் வகையில் விருதுநகர் மாநாடு அமைந்துள்ளது. ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய மருது சகோதரர்களை தந்த மண் விருதுநகர். ஒரு கட்சியின் கிளை அமைப்பில் 50 லட்சம் உறுப்பினர்கள், 5 லட்சம் நிர்வாகிகள் கொண்ட இயக்கம் திமுக தான்.
வெற்றுக்கூச்சல் போடும் கூட்டம்
பூத் அமைப்பு வரை பலம் கொண்டது இளைஞரணி. எந்த அமைப்பு பலமும், கொள்கையும், லட்சியமும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த கூட்டத்தால் அவர்களுக்கும் பயனில்லை.. யாருக்கும் பயனில்லை.. தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்.. இனி திருக்குறளும் கூறுவார்.
திராவிட மாடல் ஆட்சி
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, டபுள் என்ஜின் ஆட்சி அமைய வேண்டும் என்றார். தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியில் 11.19% வளர்ச்சியை அடைந்துவிட்டது. தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியில் பாதியை கூட டபுள் என்ஜின் ஆட்சி உள்ள மாநிலங்கள் தொடவில்லை. ஆனால் எப்போதும் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும் தலைவர் தான் முதல்வர் ஸ்டாலின்.
அதிமுக பயப்படலாம்
தேர்தல் திருவிழா என்பதால் தமிழ்நாட்டில் புதுப் புது கடைகளை போட ஆரம்பித்துள்ளார்கள். திருவிழா முடிந்ததும் கடைகளை எடுத்துவிடுவார்கள். ஆனால் திமுகதான் என்றைக்குமே மக்களோடு நிற்கும். முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதால் சங்கிகளுக்கு எரிச்சலாக உள்ளது. பாஜகவின் மிரட்டலுக்கு எல்லாம் அடிமை அதிமுக பயப்படலாம்.
அதிமுக மீது அட்டாக்
முதல்வர் ஸ்டாலினின் திமுக பயப்படாது. வழக்குகளை வைத்து மிரட்டினால் அதிமுக பயப்படலாம்.. திமுக ஒருநாளும் பயப்படாது. இந்தியாவிலேயே பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி தான். மோடி, அமித்ஷா கால்களை பார்த்து நடந்தால், முட்டுச்சந்தில் தான் போய் நிற்க வேண்டும். பாஜகவின் கிளை அமைப்பதாக அதிமுக மாறிவிட்டது.
அரசியல் அறிவில்லாத அட்டைகள்
சட்டசபைத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் கண் அசைத்தால் மட்டும் போதும்.. அவர் சொல்வதை இளைஞரணி செய்து முடிக்கும். உயிர் போனாலும் போகுமே தவிர, உதயசூரியன் எங்களை விட்டுப் போகாது. அரசியல் அறிவே இல்லாத அட்டைகள் என்னதான் உளறினாலும், புலம்பினாலும் களத்தில் நின்று வெல்லப் போகும் கட்சி திமுக தான்.. உதயசூரியன் சின்னம்தான் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
