3 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்.. திமுக, அதிமுகவின் குரல்கள் தேய்ந்துவிட்டது.. கிருஷ்ணசாமி விமர்சனம்!
விருதுநகர்: நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதிமுகவின் குரல் தேய்ந்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு வந்து 15 மாதங்களாகியும் முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. குடும்ப பெண்களுக்கு ரூ. 1000 திட்டம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவை நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் மின் கட்டண உயர்வை அதிகரிக்கிறார்கள். இந்த ஆட்சி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மத்திய அரசை மட்டுமே தமிழக அரசு குற்றம்சாட்டுகிறது.

பட்டாசு தொழில்
இந்த ஆட்சி வந்த பின் மக்கள் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள் பட்டாசு தொழில் முடங்கி வருகிறது. சரவெடிக்கு தடை விதிப்பதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளது. சீனாவில் எவ்வாறு பட்டாசு தயாரிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து சிவகாசியில் பட்டாசு தொழிலை காக்க வேண்டும்.

தென் தமிழ்நாடு
விருதுநகர் மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். சிவகாசியை கந்தக பூமி என்று கூறாமல் வேளாண் பூமியாக மாற்ற வேண்டும். டெல்டா மாவட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், தென் மாவட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். விருதுநகரில் வரக்கூடிய ஜவுளி பூங்கா மக்களுக்கு பாதிப்பு இல்லாத சாயப்பட்டறை இல்லாத வகையில் அமைய உள்ளதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள்
பள்ளியில் தேர்ச்சி பெறுவதை வைத்து கல்வி நிறுவனங்கள் வியாபாரமாக்கி வருகின்றன. குழந்தைகளை டார்ச்சர் செய்கிறார்கள். கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு பகுதியில் தான் தவறுகள் நடக்கிறது.

வளர்ச்சி இல்லை
தென் தமிழகத்தில் பெரிய வளர்ச்சி எதும் இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லை. திமுக மற்றும் அதிமுகவால் இனி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாது. அவர்கள் தேய்ந்து போன டேப்பரி கார்டு போல் மாறிவிட்டார்கள். அதேபோல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications