காசு இல்லாததால் குற்றாலம் போக முடியலை! அதனால் கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கினேன்! தங்கபாண்டி பரபரப்பு
சென்னை: காசு இல்லாததால் அன்றைய தினம் குற்றாலத்திற்கு போக முடியவில்லை. அதனால் கூமாபட்டியை டிரெண்டாக்கினேன் என இளைஞர் தங்கப்பாண்டி தெரிவித்துள்ளார். கூமாபட்டி என்ற கிராமத்தை எதற்காக பெரிய அளவில் டிரெண்டாக்கினார் என்பதை அவரே விளக்கினார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இருக்கிறது கூமாபட்டி என்ற கிராமம். இது இன்று உலக அளவில் பிரபலமடைந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ரீல்ஸ் வைரலானது. அதில் ஒரு இளைஞர் நீரில் குளித்தபடியே , "ஏங்க கூமாபட்டிக்கு வாங்க" தண்ணிய பாருங்க.. சர்பத் மாதிரி இருக்கும்.. 7அப் மாதிரி இருக்கும்! தனி ஐலாண்டு கூமாபட்டி.. கல்யாணம் ஆகலையா கூமாபட்டிக்கு வாங்க!
கவலையா இருக்கா கூமாபட்டிக்கு வாங்க. காதல் தோல்வியா கூமாபட்டிக்கு வாங்க என அந்த இளைஞர் அழைத்தார். இதனால் பயண பிரியர்களும், சாகச பிரியர்களும் வண்டியை எடுத்துக் கொண்டு கூமாபட்டிக்கு சென்றனர். அங்கு அப்படி எதுவும் இல்லாததால் அந்த இளைஞரை திட்டி விட்டு ஊர் திரும்பினர்.
பின்னர்தான் தெரிந்தது , அந்த இளைஞர் தங்கபாண்டி குளித்த இடம் பிளவக்கல் அணை. இந்த அணைக்கும் கூமாபட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டுக்கும் 10 கி.மீ தூரம் இருக்கிறது. இப்படி கூமாபட்டியை உலக ஃபேமஸ் ஆக்கிய தங்கபாண்டி ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? அவர் கூறுகையில், "எங்க ஊர் கூமாபட்டி பேமஸ் ஆனதில் மகிழ்ச்சி. நிறைய தடவை இது போல் தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கு கத்தியிருக்கிறேன். ஆனால் கடைசியாக நான் செய்த ரீல்ஸில்தான் அதற்கு பலன் கிடைத்தது.
எங்களது குடும்பம் ஏழ்மையில் இருக்கிறது. அப்பா கூலி தொழிலாளி. ஒரு முறை எனது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து குற்றாலத்திற்கு டூர் போலாம்னு சொன்னாங்க. அதை என்னிடம் சொன்ன போது, என் கிட்ட காசு இல்லை. எனக்கும் சேர்த்து காசு செலவு செய்ங்கன்னு சொன்னேன். உடனே என்னை விட்டுவிட்டு போய்ட்டாங்க.
அப்போதுதான் முடிவு செய்தேன். நம் ஊரில் அணை, ஆறு, ஃபால்ஸ் எல்லாம் இருக்கு, நாம ஏன் அடுத்த ஊருக்கு போகணும் என நினைத்துதான் கூமாபட்டியை பேமஸ் ஆக்கினேன். இதற்காக நான் ஒரு ஆண்டாக முயற்சித்தேன். இப்போ கூமாபட்டிக்கு போக முடியலைன்னு பல பேரை எனது ரீல்ஸ் ஏங்க வைத்துள்ளது என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
கூமாபட்டி இருப்பதே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் என்கிறார்கள். இங்கு 18 நீர்வீழ்ச்சி இருக்கிறதாம். மலைகளில் இருந்து தண்ணீர் இயற்கையாக வருவதால் இது மூலிகை தண்ணீர். குடிப்பதற்கு இனிமையாக இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications