"பேரழிவின் தொடக்கம்?" அப்படியே முழுசா கறுப்பு கலரில் மாறிய அமெரிக்க தலைநகர்! இது என்ன புதுசா இருக்கு
வாஷிங்டன்: கனடாவில் இப்போது பற்றி எரியும் காட்டு தீ, அமெரிக்காவையும் ஒரு வழி செய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனை சுற்றிலும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் காட்டு தீ மோசமான பிரச்சினையைக் கொடுத்து வருகிறது. காட்டு தீ ஒரு முறை ஆரம்பித்துவிட்டால், அது மளமளவென பரவி விடும். காட்டில் அருகருகே இருக்கும் மரங்களும் வீசும் காற்றும் இதற்குக் காரணம்.

இந்த காட்டுத் தீயால் கனடா இப்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கே பற்றி எரியும் காட்டுத் தீயைச் சமாளிக்க முடியாமல் அந்நாட்டு தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். இதனால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவு காடுகள் எரிந்து நாசமாகியுள்ளது.
அமெரிக்கா: இந்த காட்டுத் தீயால் கனடா மட்டுமின்றி அமெரிக்காவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனடா காட்டுத் தீயால் எழுந்துள்ள புகை அமெரிக்க நகரங்களையும் சூழ்ந்துள்ளது. இதனால், ஏற்கனவே நியூயார்க் முழுக்க புகை மண்டலமாக இருக்கும் நிலையில், இப்போது தலைநகர் வாஷிங்டனிலும் இதேபோன்ற நிலைமை உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் புகையால் ஏற்கனவே பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அங்கே போக்குவரத்தும் மக்கள் கூட்டமும் குறைவாகவே இருக்கிறது. பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு போன்ற அத்தியாவசியமற்ற சேவைகள் நிறுத்தப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா காட்டுத்தீயால் வரும் புகையால் இந்தளவுக்குப் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
வாஷிங்டன்: தலைநகர் வாஷிங்டனில் பல இடங்களில் அடர்த்தியான புகை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியே வந்தால் சில மீட்டர் தூரத்திற்கு மேல் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. அந்தளவுக்குக் காற்றில் மாசு பொருட்கள் கலந்துள்ளன. இதனால் அங்கே வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலாந்து, தென் கரோலினா, ஓஹியோ, இந்தியானா மற்றும் மிச்சிகன் என மத்திய மேற்கு பகுதிகளுக்கும் காற்று மாசு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க நகரங்களில் நடக்க இருந்த முக்கிய நிகழ்ச்சிகள், அவ்வளவு ஏன் விளையாட்டு நிகழ்ச்சிகளும் கூட தள்ளி வைக்கப்பட்டன.
காற்றில் இப்படி நுண்ணிய துகள்கள் அதிகமாக இருந்தால் சுவாசப் பிரச்சினை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் அமெரிக்கர்கள் முடிந்தால் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் காற்றின் தர அளவீடுகள் "அபாயகரமான" அளவை எட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
புது வார்னிங்: நியூயார்கில் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே காற்று மாசு அதிகமாக இருப்பதால் அங்கே வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இணையம் மூலம் மாணவர்களுக்குத் தொடர்ந்து பாடம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புகையால் பகுதி, நியூயார்க், பிலடெல்பியாவில் பகுதிகளில் விமானச் சேவை இரண்டாவது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் விமானங்கள் தாமதமாகவே வந்துள்ளது.
இப்போது காட்டுத்தீயால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கனடாவுக்கு உதவத் தயாராக உள்ளதாகப் பல நாடுகளும் உறுதியளித்துள்ளன. கடந்த ஒரு மாதமாகவே இந்தக் காட்டுத்தீ பற்றி எரியும் நிலையில், பல ஆயிரம் மக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தக் காட்டுத்தீயால் அங்கே ஒரு கோடி ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் எரிந்து நாசமாகியுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளின் ஆண்டு காட்டுத்தீயால் ஏற்பட்ட பாதிப்பை விட15 மடங்கு அதிகமாகும்.












Click it and Unblock the Notifications