"AI பேரழிவு.." அமெரிக்காவின் பென்டகனில் குண்டுவெடிப்பு? ஏஐ போலி படத்தால் சரிந்த பங்கு சந்தை.. பரபர
வாஷிங்டன்: ஏஐ கருவிகள் குறித்து பலரும் எச்சரித்து வரும் நிலையில், அது நமது சமூகத்தில் என்ன மாதிரியான மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விளக்கும் வகையிலான சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே உலகளவில் நாம் எங்குத் திரும்பினாலும் ஏஐ குறித்தே பேச்சாக இருக்கிறது. அதிலும் ஏஐ துறையை சாட் ஜிபிடிக்கு முன்பு, சாட் ஜிபிடிக்கு பின்பு என எளிதாகப் பிரிக்கலாம். அந்தளவுக்கு சாட் ஜிபிடி ஏஐ துறையைப் புரட்டிப் போட்டுள்ளது.

சாட் ஜிபிடி முதல் ஏஐ கருவி இல்லை என்ற போதிலும் நாம் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் வலிமையான ஒரு ஏஐ கருவியாக இந்த சாட் ஜிபிடி இருக்கிறது.. இதனால் இந்த சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
நாம் எந்தவொரு கேள்வி கேட்டாலும் இந்த சாட் ஜிபிடி துல்லியமாகப் பதிலைச் சொல்லும். கேள்விகள் மட்டுமில்லை, கவிதை, லவ் லெட்டர் என எது கேட்டாலும் நொடிகளில் மளமளவெனச் சொல்லும். இன்னும் சிலர் இந்த சாட் ஜிபிடியை தேர்வுகளிலும் பயன்படுத்துகிறார்கள். பல தேர்வுகளை இந்த ஐஏ கருவி பாஸ் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மெகா வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு ஏஐ கருவிகள் வரத் தொடங்கிவிட்டன.
இது சம காலத்தில் நடக்கும் மிகப் பெரிய மாற்றம் என்று குறிப்பிட்டும் ஆய்வாளர்கள். நமது வாழ்க்கையை இது அடுத்த லெவலில் மாற்றப் போகிறது என்றும் கூறுகின்றனர். இதற்கிடையே ஏஐ கருவிகளை பல்வேறு தரப்பினரும் வரவேற்றாலும் கூட ஒரு தரப்பினர் தொடர்ந்து எச்சரித்தே வருகிறார்கள்.. அதாவது இந்த ஏஐ கருவிகளால் வேலையிழப்பு அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல இதன் மூலம் பொய்யான செய்திகளும் எளிதாகப் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.
அவர்கள் ஏன் எச்சரித்தனர் என்பதை எடுத்துக் காட்டும் வகையிலான ஒரு சம்பவம் இப்போது அரங்கேறியுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பது சர்வதேச அளவில் கவனிக்கப்படும். அங்குச் சிறு அசம்பாவித சம்பவம் நடந்தாலும் அது சர்வேதச அளவில் எதிரொலிக்கும். பங்குச் சந்தை மளமளவென சரிந்து பொருளாதார பாதிப்புகளும் ஏற்படும்.

இதனிடையே அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் பென்டகன் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டது போன்ற ஒரு போலி படம் திடீரென இணையத்தில் டிரெண்டானது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்தப் படம் பார்க்க உண்மையான படத்தைப் போலவே இருந்தது. இதனால் நெட்டிசன்கள் பலரும் இந்தப் படத்தைப் பரப்பினர்.
ஒரு கட்டிடத்திற்கு அருகே ஒரு பெரிய புகை மூட்டம் இருப்பது போல அதில் இருந்தது. பென்டகன் அருகே இந்த மோசமான குண்டுவெடிப்பு வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறி இந்தப் படம் ட்விட்டரில் டிரெண்டானது. இதை ப்ளு டிக் பெற்ற பலரும் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்தால் பலரும் உண்மை எனக் கருதினர்.
இது டிரெண்டாக தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே இது பொய்யான தகவல் என்று அந்நாட்டின் போலீார் விளக்கமளித்தனர். அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகன் அல்லது அதற்கு அருகில் எந்த வெடிப்பு சம்பவமும் நடைபெறவில்லை என்றும் இதனால் பொதுமக்கள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் இல்லை என விளக்கமளித்தனர்.
இருப்பினும், அதற்குள் இந்தப் படம் மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதாவது இந்தப் படம் டிரெண்டான நிலையில், பலரும் இதை உண்மை என நினைத்தனர். இது அந்நாட்டின் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்காவில் தாக்குதல் என நினைத்து பலரும் பங்குகளை விற்றதால் மார்கெட் கொஞ்ச நேரத்தில் மளமளவென சரிந்தது. அதன் பின்னரே இது பொய்யான தகவல் என்பது தெரிய வந்தது.
ஏஐ நமது உலகில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான சிறு உதாரணம் தான் இது என்று பலரும் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications