ஒரே நேரத்தில் 14,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்.. இ-மெயிலில் ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்! பின்னணி
வாஷிங்டன்: பிரபல நிறுவனமான அமேசான் ஒரே நேரத்தில் 14,000 ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கி உள்ளது. பணி நீக்க நடவடிக்கையாக 3 மாதம் சம்பளம் தருவதாகவும், இனி பணிக்கு வர வேண்டாம் எனவும் அந்த இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் இந்த பணி நீக்கத்தின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமேசான்.. உலகில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், ஏஐ உள்பட பல்வேறு சேவைகளை அமேசான் வழங்கி வருகிறது.

இதனால் உலகின் பிரபலமான நிறுவனங்களாக உள்ள மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஆல்பபட், மெட்டா வரிசையில் அமேசானும் இணைந்துள்ளது. இந்நிலையில் தான் அமேசானில் தற்போது ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் முதல் அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இதுதான் அமேசான் வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிகமானவர்களை பணி நீக்கம் செய்வதாகும். இதற்கான நடைமுறையை அந்த நிறுவனம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் முதற்கட்டமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் உலகம் முழுவதும் 14,000 ஊழியர்களை அமேசான் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இ-மெயில் முகவரி இல்லாதவர்களுக்கு அந்த நிறுவனத்தின் ‛ஹெல்ப் டெஸ்க்கில்' பணியாற்றுவோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணி நீக்கம் பற்றிய தகவலை தெரிவித்துள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்கப்படுவதாகவும், இனி அலுவலகம் வர வேண்டாம். வீட்டிலேயே இருங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த முடிவை சாதாரணமாக எடுக்கவில்லை. கடினமாக தான் இருந்தது. இருப்பினும் நிறுவனத்தின் மறுகட்டமைப்பை மனதில் வைத்து இந்த பணி நீக்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாப்ட், மெட்டா உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை நீக்கி வருகிறது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வருகையால் தான் ஊழியர்கள் கொத்து கொத்தாக பணி நீக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அமேசான் நிறுவனமும் இணைந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
இந்த பணி நீக்கத்தின் பின்னணியில் 2 முக்கிய மேட்டர் உள்ளது. ஒன்று ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் பணியில் ரோபோக்களை பயன்படுத்துவது ஆகியவை தான் ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு வைத்துள்ளது. அமேசான் சார்பில் தொடர்ந்து ஏஐ மற்றும் ரோபோ பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் 6 லட்சம் ஊழியர்கள் வரை பணியை இழக்கலாம் என்று நிபுணர்கள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications