"வெளியே போ".. ஜெலன்ஸ்கி - டிரம்ப் மோதலுக்கு நடுவே அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் தந்த ரியாக்சன்
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவை டிரம்ப் வெளியேற்றினார். இந்த வேளையில் உக்ரைனுக்கான அமெரிக்கா பெண் தூதர் கொடுத்த ரியாக்சன் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரை தொடங்கியது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

இதுதொடர்பாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் அவர் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு ரஷ்யா, அமெரிக்கா பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் வைத்து போர் நிறுத்தம் தொடர்பாக பேசினர். இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அதிருப்தியடைந்தார். உக்ரைன் இல்லாமல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டால் அதனை ஏற்கமாட்டோம் என்று கூறினார்.
இது டொனால்ட் டிரம்பை டென்ஷனாக்கியது. இதனால் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கடுமையாக விமர்சித்தார். அதோடு ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வரும்படி டிரம்ப் அழைப்பு விடுத்தார். அந்த வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யாவுடன் போர் புரிய உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி உதவி செய்துள்ளது. அதனை உக்ரைன் திரும்ப வழங்க வேண்டும். இதற்கான ஒப்பந்தம் என்பது கையெழுத்தாகும் வகையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது திடீரென்று இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட டிரம்ப், பத்திரிகையாளர் முன்பு ஜெலன்ஸ்கியை திட்டினார்.
நாங்கள் இல்லாவிட்டால் உக்ரைன் என்ற நாடே இருக்காது என்று கூறினார். அதோடு டீலுக்கு ஒகே என்றால் மீண்டும் வெள்ளை மாளிகை வாருங்கள் இல்லாவிட்டால் வெளியே செல்லுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவினர் வெளியே சென்றனர். இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்த வேளையில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்சனா மார்கரோவா அமர்ந்து குறிப்பெடுத்து கொண்டிருந்தார். டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம் ஏற்படவே அதிர்ச்சியான ஒக்சனா மார்க்ரோவா தனது தலையில் கைவைத்து தலை குனிந்து பதற்றமானார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக வெள்ளைமாளிகையில் நடந்த இந்த களேபரத்துக்கு முக்கிய காரணம் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் - ஜெலன்ஸ்கி இடையேயான கருத்து மோதல் தான். அதாவது டொனால்ட் டிரம்புடன், விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமர்ந்து இருந்தார். அப்போது டொனால்ட் டிரம்ப் பக்கம் இருந்த அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ், ‛‛அமெரிக்க டிப்ளமேசி ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. போர் நிறுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் பேசி உள்ளது. ஆனால் உங்களின் செயல்பாடு உக்ரைனை அழிவுப்பாதைக்கு எடுத்து செல்லும் வகையில் உள்ளது'' என்று கூறினார்.
இதற்கு ஜெலன்ஸ்கி, ‛‛ரஷ்யா செய்வதை நீங்கள் தடுக்கவே இல்லை. 2014ல் ரஷ்யா எங்களின் நிலத்தை ஆக்கிரமித்தது. அப்போது இருந்த பராக் ஒபாமா, அதன்பிறகு டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் எதையும் செய்யவில்லை. அப்படியான சூழலில் எதை சொல்கிறீர்கள்'' என்று கூறினார்.இதை கேட்ட ஜேடி வான்ஸ், ‛‛அமெரிக்காவை பத்திரிகையாளர் முன்பு அவமானப்படுத்துகிறார். மிஸ்டர் பிரசிடென்ட்'' என்று கூறினார்.
இதையடுத்து டிரம்ப் குறுக்கீட்டு, ‛‛உக்ரைன் இப்போது நல்ல நிலையில் இல்லை. மோசமான சூழலில் நீங்கள் இருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் தான் காரணம். பலகோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்" என்றார். இதற்கு பதில் கூறிய ஜெலன்ஸ்கி, ‛‛இப்படி சத்தமாக மீடியா முன்பு போர் பற்றி பேசுவது சரியா? என்று யோசித்து பார்க்க வேண்டும். போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்" என்றார்.
இதற்கு டிரம்ப், "நீங்கள் தனியாக இல்லை.. அமெரிக்க உங்களுக்கு உதவியிருக்கிறது. தனியாக இருந்தால் உக்ரைன் என்ற நாடே இருந்திருக்காது. உங்களுக்கு 350 பில்லியன் டாலர் எங்கள் முன்னாள் பிரதமர் தந்திருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம். நாங்கள் இருப்பதால் தான் உங்கள் நாடு இருக்கிறது. 3ஆம் உலகப்போரை வைத்து விளையாட வேண்டாம். சமரசம் பேச நினைத்தால் மட்டும் அடுத்த முறை இங்கு வாருங்கள்'' என்று கூறி வெளியே போகும்படி கூறினார். இதையடுத்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவினர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினர்.












Click it and Unblock the Notifications