பிளைட்டிற்கே இந்த கதியா! போயிங் 737 விமானத்தில் ’நட் லூஸ்’ பிரச்சினை.. இந்திய விமானங்கள் தீவிர ஆய்வு
வாஷிங்டன்: போயிங் 737 மேக்ஸ் பயணிகள் விமானத்தில் நட் லூஸ் பிரச்சினை கண்டறியப்பட்டதால் உலகம் முழுவதும் அந்த விமானங்களை வாங்கி இயக்கி வரும் நிறுவனங்கள் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிலும் மூன்று நிறுவனங்ள் இந்த விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனம் போயிங் 737 மேக்ஸ் என்ற விமானத்தை தயாரித்து வருகிறது. அதி நவீன வசதிகள் கொண்ட இந்த விமானம் உலக அளவில் விமான விற்பனையில் புதிய சாதனை படைத்தது. அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே இந்த விமானத்தை வாங்க உலக அளவில் விமான சேவையில் ஈடுபட்டு வரும் மிகப்பெரிய நிறுவனஙக்ளும் போட்டி போட்டு ஆர்வம் காட்டி வந்தன.

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்தாவில் இந்த போயிங் 737 மேக்ஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 356 பயணிகளும் பலியாகினர். அதன்பிறகு இந்த விமானங்கள் இயக்கம் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே அதாவது 2021 ஆம் ஆண்டில் தான் மீண்டும் போயிங் 737 மேக்ஸ் விமானம் வானில் பறக்க அனுமதி கிடைத்தது.
குறைபாடு கண்டுபிடிப்பு: அதன்பிறகு உலக அளவில் பல்வேறு முன்னணி விமான நிறுவனங்களும் இந்த விமானங்களை வாங்கி இயக்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஆகாஷா ஏர் , ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா ஆகிய விமான நிறுவனங்களிடமும் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் உள்ளன. இந்த நிலையில் தான், பி737 மேக்ஸ் விமானம் ஒன்றில் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து விமானங்களில் ஆய்வு மேற்கொள்ளுமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் போயிங் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இது குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பு கூறியதாவது:- போயிங் நிறுவனத்தின் பி737 மேக்ஸ் என்ற விமானத்தில் சா்வதேச விமான நிறுவனம் ஒன்று பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது.
ஆய்வு செய்யுங்கள்: அதில், விமானம் பறக்கும்போது அதைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ( rudder control system) பாகத்தில் நட் இல்லாமல் போல்ட் மட்டும் இருந்துள்ளது. இதனால், லூஸ் நட் பிரச்சினை ஏற்படும் என்பதால் உரிய ஆய்வை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் குறைபாடு இருந்தால் தமக்குத் தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து சர்வதேச அளவில் இந்த விமானங்களை இயக்கும் நிறுவனங்கள் தங்களின் விமானத்தில் இத்தகைய குறைபாடு உள்ளதா? என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஏர் இந்தியா, ஏர் ஆகாஷா,ஸ்பேஸ் ஜெட், ஆகிய நிறுவனங்களிடம் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
உயர் தரத்தை கடைப்பிடிக்கிறோம்: ஆகாஷா ஏர் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரும் இந்த தகவலை உறுதி செய்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் போலவே நாங்களும் பாதுகாப்பில் உயர் தரத்தை கடைபிடித்து வருகிறோம். உற்பத்தி நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அளித்த பரிந்துரைகளை பின்பற்றி வருகிறோம்.
எங்களின் விமான சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை என்றார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் இதே தகவலை தெரிவித்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தற்போது வரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. உயர் பாதுகாப்பு விதிமுறைகளுடன் செயல்படும் விமானத்தில் நட் லூஸ் பிரச்சினை இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் விமான பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications