கோவிஷீல்டு ஏற்படுத்தும் மற்றொரு மோசமான "பக்க விளைவு.." வேக்சின் போட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
வாஷிங்டன்: கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்கனவே அரிதான ரத்த உறைதல் பிரச்சினை கண்டறியப்பட்ட நிலையில், இப்போது அது மற்றொரு மிக அரிதான பக்க விளைவை ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் நம் அனைவரையும் காப்பாற்றியது என்றால் அது கொரோனா தடுப்பூசிகள் தான். தீவிர பாதிப்புகளை கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் குறைத்தது.

வேக்சின்: இந்தியாவைப் பொறுத்தவரை இங்குப் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு வேக்சின் தான் போடப்பட்டது. இதனைப் பிரிட்டனைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா என்ற நிறுவனம் உருவாக்கி இருந்தது. இந்த வேக்சின் வெகு சிலருக்கு அரிய ரத்த உறைதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அந்நிறுவனமே நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய கொரோனா தடுப்பூசியால் மற்றொரு அரிதான பக்க விளைவை ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதனை VITT அதாவது தடுப்பூசி தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் த்ரோம்போசிஸ் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது மிக மிக அரிதாகவே ஏற்படும் ஒரு வகை ரத்த உறைதல் பாதிப்பாகும்.
பக்க விளைவுகள்: இந்த பாதிப்பு ஒன்றும் புதியது இல்ல.. ஏற்கனவே இருக்கும் பாதிப்பு தான் என்றாலும் கொரோனா தடுப்பூசி இந்த பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் இப்போது தான் உறுதி செய்துள்ளனர். பிளேட்லெட் ஃபேக்டர் 4 அதாவது PF4 என்று அழைக்கப்படும் ஒரு புரதத்திற்கு எதிராக வழக்கத்திற்கு மாறாக இயங்கும் ஒரு ஆபத்தான ரத்த ஆட்டோஆன்டிபாடி தான் இந்த பாதிப்பு ஏற்படக் காரணமாக உள்ளது.
முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டில் கனடா, வட அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஜலதோசம் ஏற்படும் போது இதே PF4 ஆன்டிபாடியுடன் இதே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துவதைக் கண்டறிந்தனர். கொரோனா தடுப்பூசியும் கிட்டதட்ட அதே பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக வல்லுநர்கள் தான் இப்போது அஸ்டராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசி இந்த மோசான ரத்த உறைதல் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
ஒரே மாதிரியான பாதிப்பு: இது குறித்து அவர்கள் கூறுகையில், "உண்மையில் இது ஆபத்தான ஆன்டிபாடி உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அடினோவைரஸ் (ஜலதோஷம் ஏற்படுத்தும் வைரஸ்) பாதிப்பிற்குப் பிறகு ஏற்படும் அரிதான ரத்தம் உறைதலும் சரி.. தடுப்பூசி ஏற்படுத்தும் ரத்த உறைதல் பாதிப்பும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்கிறது. வரும் காலத்தில் புதிய வேக்சினை உருவாக்குவோர் இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்கள்.
கோவிஷீல்டை கண்டறிந்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில் தங்கள் தடுப்பூசி மிக அரிதாகச் சிலருக்கு TTS எனப்படும் த்ரோம்போடிக் த்ரோம்போசைட்டோபெனிக் சிண்ட்ரோம் பாதிப்பை ஏற்படுத்துவதை ஒப்புக் கொண்டது. TTS என்பது ஒரு அரிய பக்க விளைவு ஆகும்.. இது மக்களுக்கு ரத்த உறைவு மற்றும் ரத்த பிளேட்லெட் எண்ணிக்கையைக் குறைக்கும்.
ரத்த உறைதல்: இதனால் பிரிட்டனில் மட்டும் குறைந்தது 81 பேரின் உயிரிழந்துள்ளனர். மேலும், பலருக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மற்றொரு வகையான ரத்த உறைதல் பக்க விளைவையும் ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த புதிய ஆய்வு குறித்து இதுவரை அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.
அதேநேரம் பொதுவாக வேக்சின் போட்டால் சில வாரங்களில் பக்கவிளைவுகள் ஏற்பட்டுவிடும். எனவே, வேக்சின் போட்டு பல மாதங்கள் ஆகிவிட்டதால் இந்தியர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications