மூக்குடைப்பட்ட சீனா.. அருணாச்சல பிரதேசம் யாருக்கு? இந்தியாவை ஆதரித்த அமெரிக்க செனட்டர்கள்! தீர்மானம்
வாஷிங்டன்: அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் என அங்கீகரித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்டர் குழு அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
நமது அண்டை நாடாக உள்ள சீனா அடிக்கடி எல்லையில் வாலாட்டி வருகிறது. லடாக், கல்வான் பகுதியில் இந்தியா, சீனா படை வீரர்கள் இடையே மோதல்கள் கூட ஏற்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் சீனாவின் ஆக்கிரமிப்பு கொள்கை தான்.

இந்திய பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடுவதை சீனா வாடிக்கையாக வைத்துள்ளது. இதற்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்து வந்தாலும் கூட சீனா தொடர்ந்து எல்லை மீறி செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாக உள்ள அருணாச்சல பிரதேசம் எங்களுக்கு சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் ஒரு பகுதியை கூட விட்டு கொடுக்கமாட்டோம் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும் அருணாச்சல பிரதேசத்தை ‛ஸாங்னான்' என்ற பெயரில் சீனா கூறி வருகிறது.

இந்நிலையில் தான் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா நாடாளுமன்ற செனட்டர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செனட்டர்கள் ஜெப் மெர்க்லி, பில் ஹகேர்டி டிம் கெய்ன், கிறிஸ் வான் ஹோலன் உள்ளிட்டவர்கள் நேற்று முன்தினம் கொண்டு வந்த இந்த தீர்மானம் நேற்று நிறைவேறியது
இந்த தீர்மானம் என்பது சீனா-இந்தியாவின் மெக்மஹோன் கோட்டையை இருநாடுகளின் எல்லையாக அங்கீகரிக்கிறது. இந்த தீர்மானம் அமெரிக்க சென்ட சபையின் ஓட்டெடுப்புக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அமெரிக்காவின் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிலையில் அடுத்த சில வாரங்களிலேயே செனட்டர்கள் இந்தியாவுக்கு வலு சேர்க்கும் வகையில் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக செனட்டரும், இணைத்தலைவராக இருப்பவருமான ஜெப் மெர்க்லி கூறுகையில், ‛‛அமெரிக்கா என்பது விதிகள் மற்றும் ஒழுங்கமைத்த சுதந்திரத்தை விரும்புகிறது. இந்த விஷயத்தில் அனைத்தும் மிகச்சரியாக இருக்க வேண்டும். ஆனால் சீனா இந்த விஷயத்தில் மாற்று பார்வையுடன் செயல்படுகிறது. இந்தத் தீர்மானத்தின் மூலம் அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா கருதுகிறது. மேலும் அந்த பகுதிக்காக உதவி செய்யவும் அமெரிக்கா தயாராக உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications