அமெரிக்காவில் சீக்கிய டாக்ஸி டிரைவர் மீது தாக்குதல்.. வெளியான பரபர வீடியோ.. குவியும் கண்டனம்!
வாஷிங்டன்: அமெரிக்க விமான நிலையத்தில் சீக்கிய டாக்ஸி டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கில் ஜே.எஃப்.கே சர்வதேச விமான நிலையத்தின் வெளியே சீக்கிய டாக்ஸி டிரைவரை ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
ஜனவரி 4-ம் தேதி அன்று நவ்ஜோத் பால் கவுர் என்பவர் ட்விட்டரில் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். விமான நிலையத்தில் இருந்த ஒருவரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக நவ்ஜோத் பால் கவுர் ட்வீட் செய்துள்ளார்.

சீக்கிய டாக்ஸி டிரைவர் மீது தாக்குதல்
அந்த நபர் சீக்கிய டாக்ஸி டிரைவரை பலமுறை குத்துவதையும், அவரது தலைப்பாகையை அகற்ற முயல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. ''இந்த வீடியோ ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்த ஒருவரால் எடுக்கப்பட்டது. இந்த வீடியோவின் உரிமை எனக்கு இல்லை. ஆனால் வெறுப்பு நம் சமூகத்தில் தொடர்கிறது என்பது இதன்மூலம் தெரியவருகிறது. சீக்கிய டிரைவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுகிறார்கள்' என்றும் நவ்ஜோத் பால் கவுர் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம்
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகையில், ' ஜே.எஃப்.கே. விமானநிலையத்தில் சீக்கிய வாகன டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்

பன்முகத்தன்மை மிகவும் முக்கியம்
பன்முகத்தன்மை அமெரிக்காவை வலிமையாக்குகிறது. எந்த வித வெறுப்பு அடிப்படையிலான வன்முறையையும் நாங்கள் கண்டிக்கிறோம். வெறுக்கத்தக்க குற்றங்கள் எங்கு நடந்தாலும் சரி,
இத்தைகைய குற்றங்களை செய்பவர்களின் செயலுக்கு பொறுப்பேற்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளது.

சீக்கியர் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல
சீக்கிய டாக்ஸி டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் சீக்கியர் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. அங்கு சீக்கிய டிரைவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு வாஷிங்டனில் சீக்கிய உபேர் டிரைவர் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிபிடத்தக்கது.












Click it and Unblock the Notifications