நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்.. ஹவுதி தாக்குதலில் இரண்டு பேர் பலி.. பலர் படுகாயம்! நிலைமை மோசம்
வாஷிங்டன்: ஏடன் வளைகுடாவில் வரும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர் கதையாகியுள்ள நிலையில், இப்போது மற்றொரு பகீர் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் மீதான இஸ்ரேல் போருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஏமனில் உள்ள ஹவுதி படை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அது மட்டுமின்றி வளைகுடா பகுதியில் செல்லும் வணிக கப்பல்களைக் குறிவைத்தும் ஹவுதி படை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் ஒரு வித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மற்றொரு பகீர் சம்பவம் ஏடன் வளைகுடாவில் நடந்துள்ளது. அங்குள்ள ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய அனுப்பிய ஏவுகணை அங்குள்ள கப்பலைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு: கடந்த பல மாதங்களாகவே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிக்கள் செங்கடல் பாதையைக் கடக்கும் வணிகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனால், இதுவரை இந்தத் தாக்குதல்களில் சிறியளவில் சேதம் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த முறை முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது நிலைமை பகுதியில் எந்தளவுக்கு மோசமாக மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
பார்படாஸ் கொடியுடன் வந்த லைபீரியாவிற்கு சொந்தமான ட்ரூ கான்ஃபிடன்ஸ் என்ற கப்பல் அப்பகுதியில் வந்து கொண்டு இருந்த நிலையில், திடீரென அதை ஏவுகணைகள் தாக்கியுள்ளன. இதனால் கப்பலின் ஒரு பகுதியில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
என்ன நிலைமை: அவர்களில் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான சூழல் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கப்பலுக்கும் கூட குறிப்பிடத்தக்கச் சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. இந்த மோசமான தாக்குதல் காரணமாகக் குழுவினர் கப்பலைக் கைவிட வேண்டிச் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த மற்ற கப்பல்கள் உடனடியாக அவர்களுக்கு உதவ விரைந்துள்ளன.
இந்தத் தாக்குதலை ஹவுதி படையும் உறுதி செய்துள்ளன. தாங்கள் அனுப்பிய பல வார்னிங் மெசேஜ்களை புறக்கணித்துவிட்டு கப்பல் வந்ததாகத் தெரிவித்துள்ள அவர்கள், இதனால் பல்வேறு ஏவுகணைகளை அனுப்பித் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடும் கண்டனம்: இந்த ட்ரூ கான்ஃபிடன்ஸ் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கண்டம் மட்டுமின்றி அமெரிக்கா இதற்குப் பதிலடியாகத் தாக்குதலையும் நடத்தியுள்ளது. ட்ரூ கான்ஃபிடன்ஸ் தாக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏமனின் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளில் அமெரிக்கா ஆளில்லா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
அப்பகுதியில் கடல் வணிகம் பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்யவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வணிக கப்பல் மீது நடத்தப்பட்டும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஜனவரி முதல் அமெரிக்காவும் பிரிட்டனும் ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன, ஆனால் கிளர்ச்சியாளர்கள் வணிக கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை.
கடந்த இரண்டு நாட்களில் அப்பகுதியில் வரும் வணிக கப்பல்களைக் குறிவைத்து ஹவுதிகள் நடத்தும் ஐந்தாவது தாக்குதல் இதுவாகும். ஹவுதிக்கள் தொடர்ந்து இதுபோல தாக்குதல் நடத்தி வருவது அப்பகுதியில் வணிக போக்குவரத்தைக் கடுமையாகப் பாதிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் சில கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றியும் செல்வதால் செலவுகள் அதிகரிப்பதாகவும் இதனால் சர்வதேச வணிக போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications