நண்பனுக்கு எதிராக திரும்பிய ஒபாமா.. "பைடன் வேண்டாம்.. வெல்வது கடினம்!" என்ன அவரே இப்படி சொல்லிட்டாரு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து பைடன் விலக வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஜோ பைடனின் உற்ற நண்பர்களில் ஒருவரான முன்னாள் அதிபர் ஒபாமாவும் அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார். இந்த தேர்தலில் பைடன் போட்டியிட்டால் அது ஜனநாயக கட்சியின் வெற்றி வாய்ப்பை குறைக்கும் என்று ஒபாமா கருதும் நிலையில், அவர் அதிபர் ரேஸில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சியில் இருந்து பைடன் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும் அவர் ஃபிட்டாக இல்லை என்பதால் அவர் அதிபர் ரேஸில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒபாமா: இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பைடனின் வெற்றிக்கான வாய்ப்பு குறைந்துவிட்டதாக ஒபாமா நம்புகிறார். எனவே, 81 வயதான பைடன் தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவது தொடர்பாகத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்பதே ஒபாமாவின் நிலைப்பாடாக இருக்கிறது.
கடந்த 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 44ஆவது அதிபராக இருந்தவர் ஒபாமா. அவர் அதிபராக இருந்த காலத்தில் துணை அதிபராக இருந்தவர் தான் பைடன். இதனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு எப்போதும் இருந்து வந்துள்ளது. கடந்த 2020இல் பைடன் அதிபர் தேர்தலில் களமிறங்கிய போது, ஒபாமா அவருக்கா வந்து பிரச்சாரம் செய்தார். பல கூட்டங்களில் பைடனுக்கு ஆதரவாகப் பேசினார். வாக்காளர்களுக்கு நேரடியாக போன் செய்து பிரச்சாரம் செய்யும் போன் பிரச்சாரத்தில் கூட ஈடுபட்டார்.
ஆதரவு: இந்த முறை கூட டிரம்ப் உடனான விவாதத்தில் பைடன் சொதப்பிய போது அவருக்கு ஆதரவாக முதலில் வாய்ஸ் கொடுத்தவர் ஒபாமா தான். யாருக்கு வேண்டுமானாலும் ஒரு மோசமான விவாதம் அமையலாம் என்றும் இருந்தாலும் தேர்தலில் வெற்றி என்பது இந்த ஒரு விவாதத்தை மட்டுமே பொறுத்து இருந்துவிடாது என்று ஆதரவாகப் பேசியிருந்தார்.
வேண்டாம்: இந்தளவுக்கு ஆதரவாக இருந்த ஒபாமாவே இப்போது பைடனுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார். ஒபாமா இதை அதிகாரப்பூர்வமாகக் கூறவில்லை என்ற போதிலும், அவரது நிலைப்பாடு இதுவாகவே இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல வாஷிங்டன் போஸ்ட் செய்திக்கு ஒபாமா மறுப்பும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் பதவியில் இருந்து விலகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் ஒபாமா இன்னுமே கூட ஜனநாயக கட்சியில் பெரும் செல்வாக்குடன் இருப்பதால் அவரது கருத்து மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
டிரம்ப் உடனான அந்த விவாதத்திற்கு பிறகே பலரும் பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே பல தலைவர்கள் இதை வலியுறுத்தியுள்ள நிலையில், அதில் இப்போது ஒபாமாவும் சேர்ந்து இருக்கிறார்.
வாபஸ் பெறுகிறாரா: அதேநேரம், இதுவரை பைடன் தான் போட்டியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றே தொடர்ந்து கூறி வந்தார். ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவர் சக் ஷுமர் மற்றும் ஹவுஸ் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் இருவரும் சமீபத்தில் தான் பைடனை நேரில் சந்தித்து கள சூழலை விளக்கினர்.
மேலும், பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலக வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். பைடன் இதுவரை விலகும் முடிவில் இல்லை என்ற போதிலும் ஒபாமாவின் நிலைப்பாட்டிற்குப் பிறகு அவர், இது தொடர்பாகத் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications