AI வரி.. மனிதர்களுக்கு இட ஒதுக்கீடு.. ரோபோக்களிடம் இருந்து தப்பிக்க இதுவே ஒரே வழி- பில் கேட்ஸ்
வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் லட்சக்கணக்கான வேலைகள் நிரந்தரமாக அழியும் அபாயம் இருப்பதாக மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக ஏஐ பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஏஐ வரியை தனியாக விதிக்க வேண்டும் என்றும் சில குறிப்பிட்ட வேலைகளை மனிதர்களுக்கு இட ஒதுக்கீடு போல தந்துவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் உருவான புதிய தொழில்நுட்பங்கள் கூட அவை ஏகப்பட்ட வேலைகளை அழித்திருக்கின்றன. அதேநேரம் புதிய வேலைகளை உருவாக்கும். இருப்பினும், ஏஐ தொழில்நுட்பத்தை நாம் அதுபோல ஒப்பிட முடியாது என்கிறார் பில் கேட்ஸ். மனிதர்களின் அறிவுசார் பணிகளையே ஏஐ நேரடியாக மாற்றும் என்பதால் இதன் தாக்கம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை
தனது கேட்ஸ் நோட்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட கட்டுரையில், AI ஏற்படுத்த போகும் பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்ள உலக நாடுகளின் அரசுகளும் நிறுவனங்களும் போதுமான அளவு தயாராக இல்லை என பில் கேட்ஸ் கூறியுள்ளார். AI மூலம் ஏற்படும் மிக பெரிய வேலை இழப்பை சமாளிக்க, சில பணிகளை மனிதர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என ஒதுக்கி இட ஒதுக்கீடு கொள்கையை அரசுகள் உருவாக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
இயற்கை வளங்களை பாதுகாக்க சில பகுதிகள் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதை போல, மனிதர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இதுபோல குறிப்பிட்ட வேலைகளில் AI பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். மேலும், அனுதாபம், உணர்வுப்பூர்வமான புரிதல் ஆகியவை தேவைப்படும் முக்கியமான பணிகளை மனிதர்களே தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் தேவை
முதியோர் மற்றும் நோயாளிகள் பராமரிப்பு, முக்கியமான மருத்துவ நோயறிதல், தொடக்கக் கல்வி மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் போன்ற பணிகளை மனிதர்களே தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிறார். அதேபோல் அரசு நிர்வாகம் மற்றும் மனநல சேவைகள் போன்ற துறைகளில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பணிகளிலும் மனிதர்களுக்கே இறுதி அதிகாரம் தரப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நேரடி சவால்
அவர் மேலும் கூறுகையில், "கடந்த காலங்களில் நீராவி இயந்திரம், கம்யூட்டர் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் வந்தபோது சில வேலைகளை அழிந்தாலும், காலப்போக்கில் புதிய வேலைகளையும் உருவாக்கின. ஆனால் AI நிலைமை முற்றிலும் வேறுபட்டது. மனிதர்களின் அறிவுசார் திறனுக்கு AI நேரடியாக சவால்விடுகிறது. சாப்ட்வேர் உருவாக்குதல் தொடங்கி சட்டம், வாடிக்கையாளர் சேவை மற்றும் டேட்டா அனாலசிஸ் உள்ளிட்ட துறைகளில் தொடக்கநிலை மற்றும் நடுத்தர நிலை வேலைகள் அடுத்த 10 ஆண்டுகளில் வேகமாக குறையக்கூடும்.
ஏஐ வரி
மேலும், மேம்பட்ட ரோபோக்களின் வளர்ச்சியால் ஹோட்டல், உணவகம் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்கும் மனிதர்களுக்கு போட்டியாக இயந்திரங்கள் உருவாகும். AI மற்றும் ரோபோக்களால் மனிதர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பை சமாளிக்க தற்போதைய வரி முறையிலும் மாற்றம் தேவை. மனிதர்களை வேலைக்கு அமர்த்தும்போது நிறுவனங்கள் ஊதியம் தருவதோடு வரிகளையும் செலுத்துகின்றன. ஆனால் AI அல்லது ரோபோக்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை தரப்படுகிறது. அதாவது மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு வரிச்சலுகை கொடுக்கிறார்கள்.
இதை மாற்ற வேண்டும். ஏஐ பயன்படுத்த டோக்கன் வரி உள்ளிட்ட வரியையும், ரோபோக்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் நேரடி வரியை விதிக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை வேலை இழந்தவர்களுக்கு மறுபயிற்சி வழங்கவும், சமூக பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்தவும், புதிய வேலைகளுக்கு மாறுபவர்களுக்குப் பயன்படுத்தலாம்" என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
