கண்களில் கருப்பு துணி.. கைவிலங்கு! அமெரிக்க ராணுவத்தால் பிடித்து செல்லப்பட்ட வெனிசுலா அதிபர் போட்டோ
வாஷிங்டன்: வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்தது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பேட்டி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நிக்கோலஸ் மதுரோவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் USS ஐவோ ஜிமா கப்பலில், கண்களில் கருப்பு துணி கட்டப்பட்டும், கைகளில் விலங்கு போடப்பட்ட நிலையில் மதுரோ பிடித்து வரப்பட்டுள்ளார்.
கரகாஸ் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து, மதுரோவைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொண்ட சில மணி நேரங்களில் இந்த புகைப்படமானது வெளியிடப்பட்டுள்ளது.

வெனிசுலா மீது தாக்குதல்
வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக வெனிசுலாவை சேர்ந்தவர்கள் நுழைவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த் குற்றம் சாட்டி வந்தார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா வெனிசுலா இடையே நீண்ட நாட்களாக மோதல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தான் வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் தொடங்கியது. கரகாஸ் முழுவதும் முக்கியமான இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கண்களில் கருப்பு துணி
இந்த தாக்குதல் காரணமாக குடியிருப்பாளர்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். உடனடியாக, அமெரிக்க சிறப்புப் படைகள் மதுரோ தங்கியிருந்த பாதுகாப்பான இடத்திற்குள் நுழைந்து அவரைக் கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது. . மதுரோவும் ஃபுளோரஸும் சில மணி நேரங்களுக்குள் வெனிசுலா மண்ணிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அடுத்து நாட்டிற்குள் புகுந்த அந்த நாட்டின் அதிபரையே கடத்தி கொண்டுவந்துள்ள சம்பவம் உலக நாடுகளை உற்று கவனிக்க செய்துள்ளது. இந்த நிலையில் தான் நாடு கடத்தி வரப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் புகைப்படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதில் அவர் கைகளில் விலங்கு போடப்பட்டும், கண்களில் கருப்பு துணி கொண்டு மறைக்கப்பட்டும் இருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது.
எண்ணெய் கட்டமைப்பை சீர் செய்யும்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப் கூறியதாவது:- "புதிய அரசு வெனிசுலாவை ஆளும் வரை அமெரிக்காவே அந்நாட்டை நிர்வகிக்கும்.. வெனிசுலாவின் எண்ணெய் உட்கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வோம். எங்கள் ராணுவ பலத்தின் முன்பு வெனிசுலாவின் ராணுவம் மண்டியிட்டது. சட்டவிரோதியான வெனிசுலா அதிபர் மதுரோவை நீதியின் முன் நிறுத்தியுள்ளோம்.
சட்டவிரோத போதை மருந்து பொருட்களை உலகம் கடத்துவதை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது. அமெரிக்கா தற்போது பாதுகாப்புடன் இருக்கிறது. வாஷிங்டன் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். சர்வதேச சட்டம் மதிக்கப்படவில்லை. வெனிசுலா எண்ணெய் கட்டமைப்பை அமெரிக்கா சீர் செய்யும். அமெரிக்காவை மட்டுமல்ல பிராந்தியத்தையே அச்சுறுத்தினார் மதுரோ. வெனிசுலா மீது இனி தாக்குதல் நடத்துவதற்கு அவசியம் இல்லை. அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு நன்றி, இன்னும் வலுவான தாக்குதலுக்கு கூட தயாராக தான் இருக்கின்றோம். இவ்வாறு பேசினார்.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு கியூபா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதேவேளையில் சில நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications