டிரம்பிற்கு விழும் அடி.. டாலரின் கதையை முடிக்கும் ‛பிரிக்ஸ்’ நாடுகள்.. அமெரிக்காவை சீண்டிய பிரேசில்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: என்னது ‛பிரிக்ஸ்' நாடுகள் செத்துப்போய் விட்டதா? இந்தியா, ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகள் யார் என்று காட்டுகிறோம். அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் ‛பிரிக்ஸ்' நாடுகள் உறுதியாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி அச்சுறுத்தல்கள் மூலம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கொதித்து எழுந்துள்ளார் பிரேசில் அதிபர் லூலா டா சில்வார்.

சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடுகளும், இன்னொரு நாடுகளுடன் வர்த்தகம் செய்து வருகின்றன. இந்த வர்த்தகம் என்பது பெரும்பாலும் அமெரிக்க டாலரில் தான் நடந்து வருகிறது. வர்த்தகம் தொடர்பான டீல் அமெரிக்க டாலரிலேயே முடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் அமெரிக்க டாலரின் மதிப்பு என்பது தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

donald trump bricks brazil

இந்த அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்யும்போது பிற நாடுகளுக்கு கூடுதல் சுமை என்பது ஏற்படும். உதாரணமாக இந்தியாவும், ரஷ்யாவும் வர்த்தகம் செய்கிறது என்று வைத்து கொள்வோம். அவர்கள் இடையேயான வர்த்தக பணப்பரிமாற்றம் என்பது இந்தியா ரூபாய் அல்லது ரஷ்யாவின் ரூபிள் கரன்சியில் இருக்காது. அமெரிக்க டாலரில் தான் இருக்கும்.

இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் உலக நாடுகள் இடையே பெரும்பான்மையான பொருள் வாங்குவதற்கும், விற்பதற்கும் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவற்றை வாங்கவும் விற்கவும் டாலர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படியாக பல நாடுகள் இடையே அமெரிக்க டாலரில் தான் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தான் அமெரிக்க டாலரின் மதிப்பு எப்போதுமே உயர்ந்து கொண்டு வருகிறது. அதேவேளையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா உள்பட பிற நாட்டு கரன்சியின் மதிப்பு என்பது சரிந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தான் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்ய பல நாடுகளுக்கு இப்போது விருப்பம் என்பது கிடையாது. இருநாடுகள் இடையேயான வர்த்தகத்தில் தொடர்பே இல்லாத அமெரிக்கா டாலர் எதற்கு? அதற்கு பதிலாக நம் நாடுகளின் கரன்சியிலேயே வர்த்தகம் செய்யலாமே? இதன்மூலம் நம் நாட்டு கரன்சி உலகம் முழுவதும் பரவுமே. மாறாக அமெரிக்க டாலரை நாம் ஏன் தூக்கி பிடிக்க வேண்டும் என்பது பல நாடுகளுக்கு கேள்வியாக உள்ளது. இதற்கு இந்தியாவும் கூட விலக்கு அல்ல.

அதாவது உலகளவில் நாடுகளின் பாதுகாப்பு, வர்த்தக உறவுக்காக பல்வேறு நாடுகள் இணைந்து கூட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன. அந்த வகையில் முக்கியமான ஒரு கூட்டமைப்பு தான் பிரிக்ஸ். இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா இல்லை. பிரிக்ஸ் கூட்டமைப்பில் முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் மட்டுமே இருந்தன. இப்போது கூடுதலாக 5 நாடுகள் இணைந்துள்ளன. அதன்படி எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளன.

இந்த கூட்டமைப்பில் அமெரிக்காவுக்கு எதிராக உள்ள ரஷ்யா, சீனா உள்ளிட்ட 2 வல்லரசு நாடுகள் உள்ளன. அதேபோல் உலகின் 5வது பெரிய நாடான இந்தியாவும் உள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக உள்ளது. அதோடு பிரிக்ஸ் நாடுகளின் சமீபத்திய ஆலோசனை என்பது அமெரிக்காவை பதற வைத்தது. இந்த பதற்றத்துக்கு முக்கிய காரணம் என்னவென்றால் பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சியை உருவாக்குவது பற்றி விவாதித்தது தான். அதாவது பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகள் இடையே அமெரிக்க டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வர்த்தகம் செய்ய வேண்டும். இதற்காக பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

இது அமெரிக்காவை டென்ஷனாக்கியது. இதற்கு அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‛‛அமெரிக்க டாலரை குறைக்க நினைத்தால் அந்த நாடுகள் மீது 25 சதவீதம் மட்டுமில்லை 100 சதவீதம் மட்டுமின்றி 125 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். அதோடு அமெரிக்கா உடனான உறவை அந்த நாடுகள் மறந்து விட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இதையடுத்து பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சார்பில், ‛பிரிக்ஸ் கரன்சி' உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.

ஆனாலும் டிரம்ப் விடவில்லை. சமீபத்தில் கூட ‛‛பிரிக்ஸ் நாடுகள் நம் நாட்டின் டாலரை ஒழித்து கட்ட முயற்சி செய்தன. டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை உருவாக்க விரும்பினர். 100 முதல் 150 சதவீதம் வரி விதிப்பேன் என்று கூறினேன். இப்போது பிரிக்ஸ் கூட்டமைப்பு செத்துப்போய்விட்டது'' என்றார். அதன்பிறகும் கூட பிரிக்ஸ் கூட்டமைப்பை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இப்படியான சூழலில் தான் இந்தியா, ரஷ்யா, சீனாவுடன், பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் பிரேசில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி பிரேசில் அதிபர் லூலா டா சில்வா கூறுகையில், ‛‛அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர பிரிக்ஸ் நாடுகள் உறுதி கொண்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே பணம் செலுத்துவதற்கான மாற்று பிளாட்பார்மை ஏற்படுத்தும் முயற்சியை அது ஒருபோதும் தடுக்காது'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சீண்டி உள்ளது பிரிக்ஸ் உறுப்பு நாடான பிரேசில்.

இதன்மூலம் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு விரைவில் அமெரிக்க டாலரை பயன்படுத்தாது. இதனை டிரம்ப் தனது வரி விதிப்பு மிரட்டல் மூலமாக தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இருப்பினும் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்காக தனியே பிரிக்ஸ் கரன்சி உருவாக்கப்படுமா? இல்லாவிட்டால் வர்த்தகம் நடக்கும் நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் கரன்சி பயன்படுத்தப்படுமா? என்பது பற்றி பிரேசில் அதிபர் லூலா டா சில்வா எதுவும் தெரிவிக்கவில்லை.

மேலும் பிரிக்ஸ் கூட்டமைப்பு கரன்சி உருவாக்குவதால் அமெரிக்கா பயப்படுவதன் பின்னணியில் இன்னொரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது 2ம் உலக போருக்குப் பிறகு தான் அமெரிக்காவின் டாலர் முதன்மை கரன்சியாக மாறியது. அதன்பிறகே மற்ற நாடுகளும் அதை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஆரம்பித்தது. சமீபத்தில் ப்ரூக்கிங்ஸ் என்ற திங்க் டேங் என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் பயன்பாடு என்பது குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி உலகளவில் அனைத்து கடன் பரிவர்த்தனைகளில் 64 சதவீதம் டாலர்களில் இருப்பதாகவும், உலக நாணய கையிருப்பில் 59 சதவீதம் டாலராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 25 ஆண்டுகளில் டாலரின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. உலகளாவிய கையிருப்பாக அமெரிக்க டாலரின் பங்கு 12 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் 71 சதவீதமாக இருந்த அமெரிக்க டாலரின் பயன்பாடு தற்போது 59 சதவீதமாக சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளும் டாலரை புறக்கணிக்கும் பட்சத்தில் அது அமெரிக்காவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் தான் டொனால்ட் டிரம்ப் பிரிக்ஸ் நாடுகளை மிரட்டி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+