'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்!
வாஷிங்டன்: ஈரான் விஷயத்தில் நேட்டோ அமைப்பின் உதவியை டிரம்ப் நாடியிருக்கிறார். ஆனால், இப்போது வரை நேட்டோ பிடி கொடுக்கவில்லை. இப்படி இருக்கையில், இந்த அமைப்பை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நேட்டோவை காகித புலி என்று விமர்சித்திருக்கும் அவர், அமெரிக்கா இல்லை என்றால் நேட்டோ அமைப்பு ஒன்றுமே இல்லை என்றும் சாடியிருக்கிறார். இது சர்வதேச அளவில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "அமெரிக்கா இல்லையென்றால், நேட்டோ ஒரு காகிதப்புலி! அணுசக்தி கொண்ட ஈரானை தடுப்பதற்கான போராட்டத்தில் இணைய அவர்கள் விரும்பவில்லை. இப்போது அந்தப் போர் இராணுவ ரீதியாக வெல்லப்பட்டுவிட்டது, அவர்களுக்கு மிகக்குறைந்த ஆபத்தே உள்ளது.
இருப்பினும், அவர்கள் செலுத்த வேண்டிய அதிகப்படியான எண்ணெய் விலையைப் பற்றி இப்போது புகார் கூறுகிறார்கள். ஆனால், இந்த அதிகப்படியான எண்ணெய் விலைக்கு ஒரே காரணமான ஹார்முஸ் நீர்ச்சந்தியை திறக்க உதவும் ஒரு எளிய இராணுவ நடவடிக்கைக்கு அவர்கள் உதவ விரும்பவில்லை. இது அவர்களுக்கு மிகவும் எளிதானது மற்றும் மிகக் குறைந்த ஆபத்து கொண்டது. கோழைகள், இதை நாங்கள் நினைவில் கொள்வோம்!" என்று பதிவிட்டிருக்கிறார்.
இப்படி டிரம்ப் காட்டமாக பேசியிருப்பது, சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டிரம்ப் நேட்டோ உறுப்பு நாடுகளை அசிங்கப்படுத்தியிருக்கிறார். இதனால், நேட்டோ அமைப்பு தன்னிச்சையான பாதையை தேர்ந்தெடுத்தாலும் ஆச்சரியப்படுதற்கு இல்லை. இதனால், அமெரிக்காவின் கோபம் அதிகமாகலாம்.
மற்றொரு கோணத்தில் பார்த்தால், நேட்டோ அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், ஹார்முஸ் நீரிணையை திறப்பத்தில் கால தாமதம் ஏற்படலாம். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதேபோல இந்த விஷயத்தை கவனித்தில் கொள்வோம் என்று டிரம்ப் அறிவித்திருப்பதால், எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகள் மீதான வரி அதிகரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications