அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று மத்திய கிழக்கு போர் தொடர்பாக முக்கிய தகவல்களை அறிவிப்பார் எனச் சொல்லப்பட்டது. போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகவே டிரம்ப் பேசுவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், டிரம்ப்பின் பேச்சு வழக்கம் போலத் தெளிவைத் தருவதற்குப் பதிலாகக் குழப்பத்தையே அதிகரித்தது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
வளைகுடா போர் 5வது வாரமாகத் தொடரும் சூழலில் இன்று காலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். போரினால் விலைவாசி உயர்வு ஏற்படும் சூழலில், அமெரிக்க மக்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதனால் போரை முடிப்பது தொடர்பாக டிரம்ப் பேசுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், டிரம்ப் உரை வேறு ஒரு தொனியில் இருந்தது என்பதே உண்மை.!

அமெரிக்கா
அடுத்த சில வாரங்களில் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அவர்களை மிகக் கடுமையாகத் தாக்க உள்ளதாகவும் ட்ரம்ப் எச்சரித்தார். இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் போர் முழுமையடைய உள்ளது என்றார். அதாவது வேலையை முடிக்கப் போகிறோம் என்றும் மிக அருகே இருக்கிறோம் எனவும் டிரம்ப் குறிப்பிட்டார். ஈரானின் கடற்படை, விமானப்படை, ஏவுகணைகள் அழிக்கப்பட்டுவிட்டன என்ற அவர், இந்த நடவடிக்கைகள் ஈரானின் ராணுவத்தை முடக்கி, பயங்கரவாத ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
அதாவது ஒரு பக்கம் போர் சீக்கிரமே முடிவுக்கு வருகிறது.. அனைத்து இலக்குகளையும் அடையப் போகிறோம்.. ஈரானின் உண்மையான தலைவர்கள் அனைவரும் இறந்துவிட்டதால் எல்லாமே விரைவில் முடிந்துவிடும் என்பது போல டிரம்ப் குறிப்பிட்டார். அதாவது போர் மிக விரைவில் ஓவர் என்பது போல ஒரு சில இடங்களில் பேசினார்.
குழப்பம்
அதேநேரம் வேறு சில இடங்களில் "அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம்" என்றும், "அவர்கள் பதிலடி கொடுக்க முயன்றால் கடுமையாகத் தாக்குவோம்" என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். அதாவது ஒரு பக்கம் வெற்றி பெற்றுவிட்டோம் எனச் சொல்லும் டிரம்ப், அடுத்த வரியே தீவிரமாகத் தாக்குவோம் எனத் தொடர்ந்து முரண்பாடாகப் பேசி வருகிறார். இப்படி டிரம்ப் உரையை வழக்கம் போலவே குழப்பத்தையே ஏற்படுத்துவதாக இருந்தது.
ஹார்முஸ்
ஹார்முஸ் விவகாரத்திலும் இதேபோலத் தான் குழப்பினார். ஹார்முஸ் ஜலசந்தியைப் பற்றிப் பேசிய ட்ரம்ப் முதலில், "கடினமான பகுதி முடிந்துவிட்டது... சண்டை முடிந்த பின், ஜலசந்தி இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். கப்பல் போக்குவரத்து நார்மலாகிவிடும்" என்றார். அதேநேரம் அவரே பிறகு, "பல நாடுகளின் கப்பல்களை அனுமதிக்க ஈரான் மறுக்கிறது. அந்த நாடுகள் இணைந்து நிற்க வேண்டும்... தைரியத்துடன் ஜலசந்திக்குச் சென்று அதைக் கைப்பற்ற வேண்டும்" என மற்ற நாடுகளை வற்புறுத்தினார்.
இன்னொரு இடத்தில் "ஆட்சி மாற்றம் எங்கள் குறிக்கோள் இல்லை" என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். ஆனால், அடுத்த வரியே ஆட்சியைத் தூக்கி எரிவோம் என்பது போலப் பேசுகிறார். இப்படி அவரது 20 நிமிட உரையில் பல முரண்பாடுகள் நிறைந்திருந்தன. இந்த தெளிவற்ற பேச்சால் அமெரிக்காவின் உண்மையான நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
தெளிவு இல்லை
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ட்ரம்ப்பின் உரை ஒரு தெளிவை வழங்கவில்லை. மாறாக, போர் தொடங்கியதிலிருந்து எப்படி அமெரிக்கா குழப்பத்திலேயே இருக்கிறதோ.. அதையே தான் பிரதிபலிக்கிறது.. ஆகவே, ஈரானுடனான போரின் போக்கு நிச்சயமற்றதாகவே உள்ளது. இது முதலீட்டாளர்களிடம் மேலும் குழப்பத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications