டிரம்பிற்கு வரும் பவர்.. கிரீன்லாந்தை வாங்காம விட மாட்டாரு போலயே! அமெரிக்காவில் திடீர் ட்விஸ்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டிரம்ப் கிரீன்லாந்தை வாங்குவது குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். இந்த முயற்சி இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது கிரீன்லாந்தை வாங்குவது தொடர்பாக டென்மார்க் உடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்பிற்கு அதிகாரம் தரும் வகையிலான புதிய சட்டத்தை டிரம்ப் கட்சி எம்பிக்கள் நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வென்றவர் டிரம்ப். இவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

டிரம்ப்:
இது ஒரு பக்கம் இருக்க டிரம்ப் அதிபரான பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளார். அது தொடர்பாக அவர் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். அதில் ஒன்று தான் கிரீன்லாந்தை வாங்குவது. டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீன்லாந்தை தனது நிர்வாகம் வாங்கும் என அவர் கூறி வருகிறார். ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கம் அந்த பிராந்தியத்தில் அதிகரிக்கும் சூழலில், அதைச் சமாளிக்க கிரீன்லாந்து அமெரிக்கா வசம் வர வேண்டும் என்பதே அவரது கருத்தாகும்.
பலரும் டிரம்ப் ஏதோ சும்மா பேசுகிறார். அதிபரான பிறகு கிரீன்லாந்து விவகாரத்தை விட்டுவிடுவார் என்றே பலரும் நினைத்தனர். ஏனென்றால் சமீப ஆண்டுகளில் இதுபோல ஒரு பிரதேசத்தை எந்தவொரு நாடும் வாங்கியது இல்லை. இதனால் டிரம்ப் கூட இதுபோல சும்மா பேசுகிறார் என்றே பலரும் நினைத்தனர்.
டிரம்பிற்கு அதிகாரம்:
ஆனால், டிரம்ப் கட்சியினர் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதாவது கிரீன்லாந்தை வாங்க முறையான பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் தரும் புதிய மசோதாவை நிறைவேற்றக் குடியரசுக் கட்சியினர் அங்குள்ள பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரவுள்ளனர். இந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு திரட்டும் பணிகளிலும் அவர்கள் இறங்கிவிட்டனர்.
மேக் கிரீன்லாந்து கிரெட் அகைன் சட்டம் என்ற பெயரில் இதைக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இப்போது வரை 10 எம்பிக்கள் இந்த மசோதாவை ஆதரிக்கிறார்கள். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் ஆண்டி ஓக்லெஸ் மற்றும் டயானா ஹர்ஷ்பர்கர் ஆகியோர் இதை முன்னெடுக்கும் சூழலில், ஆதரவு மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி:
கிரீன்லாந்தை வாங்குவதாக டிரம்ப் சும்மா பேச்சுக்கு மட்டும் சொல்லவில்லை. அதில் அவர் ரொம்பவே சீரியஸாக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. டிரம்ப் கடந்த 2019ம் ஆண்டில் முதலில் கிரீன்லாந்தை வாங்குவதாகப் பேசியிருந்தார். இருப்பினும், அப்போது அதைச் செய்யவில்லை. பிறகு 2020 இறுதியில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. சமீபத்தில் அதிபர் தேர்தலில் வென்ற பிறகு சில நாட்களில் டிரம்ப் பல முறை க்ரீன்லாந்தை வாங்குவது குறித்துப் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
கிரீன்லாந்து:
கிரீன்லாந்து இப்போது டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. கிரீன்லாந்து பகுதியை விற்கும் அல்லது மற்ற நாடுகளுக்கு எண்ணம் எதுவும் இல்லை டென்மார்க் அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது. அதேநேரம் கிரீன்லாந்தை விற்க டென்மார்க் சம்மதிக்கவில்லை என்றால் ராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவும் கூட அமெரிக்கா தயங்காது டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் டிரம்ப் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்ற பிறகு அவர் கிரீன்லாந்து விவகாரத்தில் தீவிரமாகக் கவனம் செலுத்துவார் என்றே தெரிகிறது. அவர் ஜனவரி 20ம் தேதி அதிபராகப் பதவியேற்கும் சூழலில், அதன் பிறகு இந்த விவகாரம் சூடு பிடிக்கும்.












Click it and Unblock the Notifications