மீண்டும் அமெரிக்க அதிபராகும் டொனால்டு டிரம்ப்.. உலக தலைவர்கள் யாருக்கும் நஷ்டம்? யாருக்கு லாபம்?
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று இருக்கிறார். உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் ஏற்படும் ஆட்சி மாற்றம் சர்வதேச அளவில் கவனம் பெறுகிறது. தற்போது டிரம்ப் அதிகாரத்திற்கு வர இருப்பதை உலக நாடுகள் சில, தங்களுக்கு சாதகமானதாக பார்க்கிறது. சில நாடுகள் பாதகமாக பார்க்கிறது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்க அதிபர் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் 270 க்கும் அதிகமான எலக்ட்ரோல் வாக்குகளை பெற்று வெற்றியை உறுதி செய்துவிட்டார். தற்போது வரை 295 எலக்ட்ரோல் வாக்குகளை டிரம்ப் வென்றுள்ளார். துணை அதிபராக இருக்க கூடிய ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் 224 எலக்ட்ரோல் வாக்குகளை வென்று தோல்வியை தழுவியுள்ளார்.

அமெரிக்காவின் 47வது அதிபராக வரும் ஜனவரி மாதம் டிரம்ப் பதவியேற்க இருக்கிறார். டிரம்ப் அமெரிக்க அதிபராகியிருப்பதால் சர்வதேச அளவிலும் பல அதிரடியான மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக பல நேரெதிர் கொள்கைகளை டிரம்ப் பல விவகாரங்களில் கொண்டு இருந்தார்.
உலக அளவில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர், அதையொட்டி மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரத்தை டிரம்ப் எப்படி கையாள போகிறார் என்பதும் உலக நாடுகளால் கவனம் பெற தொடங்கியுள்ளது.
இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடனும் டிரம்ப் நல்ல நட்புறவை கொண்டு இருந்தார். இதனால் டிரம்ப் வருகையால் அமெரிக்காவுடனான நட்பை மேலும் வலுப்படுத்த வாய்ப்பாக எதிர்பார்த்து இருக்கும் உலக தலைவர்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்..
பிரதமர் மோடி:
டொனால்டு டிரம்பின் சிறந்த நட்புறவை கொண்ட தலைவர்களில் ஒருவராக இந்திய பிரதமர் மோடி விளங்கினார். டிரம்பின் முதல் ஆட்சி காலத்தில் ஹூஸ்டனில் நடைபெற்ற "ஹவ்டி மோடி ! பொதுக்கூட்டத்தை நடத்தினர். தற்போது டிரம்ப் மீண்டும் அதிகாரத்த்திற்கு வந்து இருப்பதால் இந்தியா - அமெரிக்கா இடையே கூடுதல் பாதுகாப்பு ஒப்பந்தம், சீனா விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு உள்பட பல முக்கியமான விஷயத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே உறவு வலுப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியா கனடா உறவு:
ரஷ்யாவுடன் இந்தியா அதீத நெருக்கத்துடன் இருப்பதை பைடன் நிர்வாகம் விரும்பவில்லை. தற்போது இந்த நிலை மாறும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, இந்தியா - கனடா இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கனடாவுக்கு ஆதரவாக டிரம்ப் நிர்வாகம் இருக்காது என்றே புளூம்பெர்க் உள்ளிட்ட ஊடகங்கள் கூறியுள்ளன.
ஷேக் ஹசீனா:
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிரம்ப் நிர்வாகத்துடன் இணக்கமான உறவை கொண்டு இருந்தார். இதனால், அமெரிக்காவில் மீண்டும் அதிபராக டிரம்ப் வந்து இருப்பது ஷேக் ஹசீனா மீண்டும் அரசியல் ரீதியாக கம்பேக் கொடுக்க வாய்ப்பு ஏற்படலாம்.
பெஞ்சமின் நேதன்யாகு:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனுக்கும் இடையேயான நட்புறவு அவ்வளவு சுமூகமாக இல்லை. பல்வேறு விவகாரங்களில் இஸ்ரேலை கடுமையாக வார்னிங் செய்தார் ஜோ பைடன். தற்போது டிரம்ப் மீண்டும் அதிகாரத்தை பிடிக்க உள்ள நிலையில், இஸ்ரேலுக்கு நிறுத்தி வைக்கபட்டு இருந்த ராணுவம் மற்றும் உதவியை மீண்டும் அமெரிக்கா வழங்கலாம் என சொல்லப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புதின்:
நேட்டோ கூட்டமைப்பு குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்தவர் டிரம்ப். நேட்டோவில் இருந்து விலகுவது தொடர்பாகவும் டிரம்ப் பேசி வந்தார். தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கான முக்கிய காரணமே உக்ரைன் நேட்டோவில் சேர முற்பட்டதுதான். எனவே, நேட்டோவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு இருந்த டிரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வருவது, புதினுக்கு மகிழ்ச்சியை கொடுக்கலாம்.
ஜெலன்ஸ்கி:
குடியரசுக்கட்சி வெற்றி பெற்றதை முதல் ஆளாக ஜெலன்ஸ்கி பாராட்டியிருந்தாலும், உக்ரைன் தலமைக்கு கவலை அதிகரித்து இருக்க கூடும். ஏனெனில், உக்ரைனுக்கான நிதி உதவியை டிரம்ப் குறைக்க வாய்ப்புள்ளதோடு, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நிர்பந்திக்க கூடும்.
ஜி ஜின்பிங்:
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், டிரம்ப் வெற்றி பெற்று இருப்பது இந்த போட்டியை மேலும் அதிகரிக்க கூடும். சீனாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை டிரம்ப் எடுக்க வாய்ப்புள்ளது. சீன பொருட்களுக்கு 60 சதவிகித வரி விதிக்கப்படும் என்ற டிரம்பின் அச்சுறுத்தல் சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை கொடுக்கலாம்.












Click it and Unblock the Notifications