டாட்-காம் வீழ்ச்சி நினைவிருக்கா.. AI அதை நோக்கிதான் போகுது! எச்சரிக்கும் நிபுணர்கள்!
வாஷிங்டன்: AI கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்காக, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் ரூ.64.49 லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கியிருக்கின்றன. கடன் வாங்குவது பிரச்சனையில்லை! பெரும் நிறுவனங்கள் என்றால் கடன் இருக்கத்தான் செய்யும். ஆனால், இது கொஞ்சம் ஓவரான கடன் என்றும், வாங்கிய கடனுக்கு வருமானம் வரவில்லை எனில்.. கடந்த 2000ம் ஆண்டு ஏற்பட்ட 'டாட்-காம்' வீழ்ச்சியை போல, AI துறையும் வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகின் மிகவும் செல்வாக்குமிக்க முதலீட்டு வங்கியும், நிதி சேவை நிறுவனுமான 'கோல்ட்மேன் சாக்ஸ்', பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வாங்கியிருக்கும் கடன் குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

நவ.3ம் தேதி நிலவரப்படி பெரிய AI தொழில்நுட்ப நிறுவனங்கள் ரூ.64.49 லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கியிருக்கின்றன. இதில் 43% அளவுக்கு 5 குறிப்பிட்ட நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன. இது தவிர ரூ.159.56 லட்சம் கோடி அளவுக்கு குத்திகை கடன் இருக்கிறது. அதாவது, டேட்டா சென்டர் அமைக்க தேவையான அனைத்து பொருட்களையும் 10-15 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு இந்த நிறுவனங்கள் எடுத்திருக்கின்றன. எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வந்தாலும், வரவில்லை என்றாலும்.. இந்த நிறுவனங்கள் குத்தகைக்கு பணம் கொடுக்க வேண்டும்.
சோகம் என்னவெனில்.. இந்த 10-15 ஆண்டு கணக்கு என்பது அடுத்த வருடத்திலிருந்துதான் தொடங்குகிறது. அதாவது குத்தகை கடனை கட்ட இன்னும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆரம்பிக்கவில்லை. அதுக்குள்ளேயே மற்ற கடன்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக மாறியிருக்கிறது.
ஆல்பபெட், அமேசான், மைக்ரோசாப்ட், மெட்டா மற்றும் ஆரக்கிள் ஆகிய நிறுவனங்கள் தங்களின் டேட்டா சென்டர் உள்ளிட்டவற்றை அமைக்க ரூ.27.80 லட்சம் கோடி அளவுக்கு கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கின்றன. வங்கிகளிடம் ஓரளவுக்குதான் கடன் வாங்க முடியும். கடன் பத்திரங்களை வெளியிட்டால்.. வெளியிலிருந்து யாரிடமிருந்து வேண்டுமானாலும் கடனாக பணம் வாங்கலாம். எனவே இந்நிறுவனங்கள் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கின்றன. இதெல்லாம் சாதாரணம்தான். ஆனால், பிரச்சனை என்னவெனில்.. இந்த கடன் பத்திரங்கள் ரூ.23.48 லட்சம் கோடி என்கிற அளவுக்குதான் வெளியாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், கணிப்பை மீறி கடன் வாங்கப்பட்டிருக்கிறது.
இப்போதுதான் கேம் தொடங்குகிறது. இவ்வளவு கடன் வாங்கி AI நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. ஆனால், இப்போது வரை பெரிய அளவுக்கு இந்நிறுவனங்களுக்கு வருமானம் கிடைக்கவில்லை. இதேநிலைமை நீடிக்கிறது எனில்.. பெரிய பிரச்சனை வரும். 2028க்குள் லாபம் கிடைக்கவில்லை எனில் இந்த நிறுவனங்கள் வாங்கி கடனை அடைப்பதில் பெரிய சிக்கலை எதிர்கொள்ளும்.
புதியதாக AI நிறுவனங்களால் கடன் வாங்க முடியாது. ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை தாண்டி.. சின்னஞ்சிறிய நிறுவனங்களால் கடனே வாங்க முடியாத நிலை உருவாகும். பெரும் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து இயங்கும். சிறு நிறுவனங்கள்தான் புதிய கண்டுபிடிப்புகளை மையப்படுத்தி இயங்கும். ஆனால், ஏற்கெனவே கடன் கட்ட முடியாத நிலை இருப்பதால்.. சிறிய நிறுவனங்களுக்கு கடன், முதலீடு கிடைக்காது. எனவே, மொத்த AI சந்தையும் கொஞ்சம் கொஞ்சமாக காலியாக தொடங்கும்.
இது இப்படியே தொடர்கிறது எனில் 2000ல் நடந்த டாட்-காம் வீழ்ச்சியை போல, AI துறையும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
