"சீக்கிரமே கைது செய்யப்படுவார்கள்.." எலான் மஸ்க் பகீர் வார்னிங்.. 4 லட்சம் பேருக்கு பெரிய சிக்கலாம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் தான் உலக நாடுகள் மீது இறக்குமதி வரியை அறிவித்திருந்தார். இது சர்வதேச அளவில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி நம்பர் திருட்டு நடந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை இருக்கும் என்றும் சொல்லி எலான் மஸ்க் பகீர் கிளப்பியுள்ளார்.
அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இப்போது டாஜ் துறையின் தலைவராக எலான் மஸ்க் இருக்கிறார். அரசு செலவுகளைக் குறைத்து அரசின் செயல்திறனை அதிகரிப்பதே இவரது பொறுப்பு. இதற்காக இவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இருப்பினும், எலான் மஸ்கின் நடவடிக்கைகள் அமெரிக்க மக்களிடையே கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

எலான் மஸ்க்
இதனால் அமெரிக்க மக்கள் எலான் மஸ்கிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே எலான் மஸ்க் இன்னும் சில வாரங்களில் டிரம்ப் அரசில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க எலான் மஸ்க்கின் பரபர ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 4 லட்சம் பேரின் சோசியல் செக்யூரிட்டி நம்பர் திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக எலான் மஸ்க் மேலும் கூறுகையில், "சீக்கிரமே இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறேன். ஒருவர் இந்த விவகாரத்தில் நிச்சயம் கைதாவார். 4 லட்சம் பேரின் சோசியல் செக்யூரிட்டி நம்பர் மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடப்பட்டுள்ளது. இதனால் அந்த 4 லட்சம் பேருக்கு மாபெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்த தகவல் திருட்டு அமெரிக்கக் குடிமக்கள் அல்லாதவர்களையும் கூட வாக்களிக்க அனுமதித்ததாக அவர் எச்சரித்தார்.
அது என்ன சோசியல் செக்யூரிட்டி நம்பர்
சோசியல் செக்யூரிட்டி நம்பர் என்பது அமெரிக்கக் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் (கிரீன் கார்டு வைத்திருப்போர்) மற்றும் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு வழங்கப்படும் ஒன்பது இலக்க எண்ணாகும். அந்நாட்டின் சமூகப் பாதுகாப்புத் துறை இந்த சோசியல் செக்யூரிட்டி நம்பரை வழங்குகிறது. அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் யாருக்குச் சென்று சேர்கிறது.. சரியான நபர்களுக்கு உரியப் பலன்கள் கிடைக்கிறதா என்பதைக் கண்காணிப்பதே இதன் பிரதான நோக்கம். ஆனால் வரிவிதிப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்கு இது பயன்படுத்தப்படுவதால் கிட்டத்தட்ட ஒரு தேசிய அடையாள எண் போலவே இது மாறிவிட்டது.
இதில் பிரச்சினை என்னவென்றால் சோசியல் செக்யூரிட்டி நம்பர் என்பது அமெரிக்கக் குடிமக்கள் மட்டுமின்றி கிரீன் கார்டு வைத்திருப்போர் மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கும் சேர்த்தே வழங்கப்படும். இதனால் சோசியல் செக்யூரிட்டி நம்பரை அடையாள எண்ணாகக் கருதி வாக்களிக்க அனுமதிப்பது மோசடிக்கே வழிவகை செய்யும் என்பதே எலான் மஸ்க் உள்ளிட்டோரின் கருத்தாக இருக்கிறது.
தேர்தல் மோசடி
எலான் மஸ்க் அந்த ஆடியோவில் மேலும் கூறுகையில், "சட்ட விரோதமாகக் குடியேற்றம் மற்றும் தேர்தல் மோசடிக்கு இது காரணமாக இருக்கும். ஏனென்றால் அமெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி நம்பர் தான் பிரதான அடையாள எண்ணாக இருக்கிறது. எனவே, அந்த சிஸ்டத்தை ஹேக் செய்துவிட்டால் எளிதாகத் தேர்தல் நடைமுறையில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.. அமெரிக்கக் குடிமக்களாக இல்லாதவர்களையும் வாக்களிக்க அனுமதிக்க முடியும்.
மேலும், சமூகப் பாதுகாப்பு திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், வேலையின்மை சலுகைகள் ஆகியவை இதை வைத்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தோர் முறைகேடாகப் பெறுகிறார்கள். இந்த அமைப்பை இவ்வளவு எளிமையானதாக மாற்றியதே ஜனநாயக கட்சியினர் தான். சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தோருக்கு எப்போதும் வளைந்து கொடுப்பதே ஜனநாயக கட்சியினர் தான்.
எல்லாமே தவறு
பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி கூட தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்பட்ட பெமா நிதி, சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் சொகுசு ஹோட்டல்களில் தங்கச் செலவிடப்பட்டுள்ளது" என்றார். எலான் மஸ்க் இதுபோல சொன்னாலும் அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இது குறித்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications