விடாத எலான் மஸ்க்.. இந்தியாவுக்கான ரூ.182 கோடியை மீண்டும் நிறுத்திய அமெரிக்கா.. பின்னணி
வாஷிங்டன்: நம் நாட்டில் தேர்தலின்போது ஓட்டுப்போடும் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைக்காக அமெரிக்கா வழங்கிய ரூ.182 கோடி நிதியை எலான் மஸ்க் பரிந்துரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி உள்ளார்.
வல்லரசு நாடான அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளுக்கு ஏராளமான நிதி உதவிகளை செய்து வருகிறது. இது அமெரிக்கர்களின் வரிப்பணமாகும். இந்நிலையில் தான் அமெரிக்கர்களின் வரிப்பணம் தவறான வகைகளில் செலவிடப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்படும். இந்த பணத்தை கொண்டு அமெரிக்காவின் கஜானா நிரப்பப்பட்டு மீண்டும் சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா மாற்றப்படும் என்று டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தார்.

அதன்படி தேர்தலில் வென்று அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் DOGE பிரிவை உருவாக்கினார். Department of Government Efficiency என அழைக்கப்படும் இந்த துறையை தமிழில் அமெரிக்காவின் செயல்திறன் துறை என்று கூறலாம். இந்த பிரிவின் தலைவராக உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கை டொனால்ட் டிரம்ப் நியமித்தார்.
இந்த பிரிவின் நோக்கம் என்பது தேவையில்லாத செலவுகளை குறைத்து அமெரிக்கா அரசில் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தான். அதன்படி எலான் மஸ்க் டீம் யுஎஸ் ஏஐடி எனும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தை (USAID or United States Agency for International Development) முடக்கி உள்ளது. இதன்கீழ் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் நிதி உதவியால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி யுஎஸ் ஏஐடி சார்பில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்பட பல நாடுகளுக்கான நிதி என்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் எலான் மஸ்க் தலைமையில் அதிபர் டிரம்ப் அமைத்த DOGE எனப்படும் அரசு திறன் மேம்பாட்டு துறை அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக தற்போது பல நாடுகளுக்கு தேர்தல், பாதுகாப்பு, இதர சமூக நலன் சார்ந்த விஷயங்களுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியையும் நிறுத்தி வைக்க எலான் மஸ்க் பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரையை டொனால்ட் டிரம்ப் ஏற்றுள்ளார்.
இதன்மூலம் இப்போது மொத்தம் 718.8 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான நிதி உதவி என்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவுக்கான நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தேர்தலின் போது ஓட்டுப்போடும் வாக்காளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைக்காக அமெரிக்கா 21 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பு ரூ.182 கோடி) வழங்கியது. தற்போது இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி தான் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்து இருநாடுகளின் உறவு பற்றி பேசினர். இந்நிலையில் தான் தற்போது இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வங்கதேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த அமெரிக்கா வழங்கி வந்த 252 கோடி ரூபாய் நிதி உதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர கம்போடியா, லிபியா, தென்ஆப்பிரிக்கா, நேபாளம் உள்பட பல நாடுகளுக்கு வழங்கி வந்த நிதிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. மொ்ததமாக இந்த ஒரே உத்தரவில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் ரூ.6,266 கோடி நிதியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தி வைத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications