பணத்தை திருப்பி தாங்க.. நோட்டீஸ் அனுப்பிய எக்ஸ் நிறுவனம்.. அதிர்ந்த EX ஊழியர்கள்! என்னதான் நடக்குது?
வாஷிங்டன்: டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிலருக்கு அதிக சம்பளம் கொடுத்து விட்டதாகவும் தற்போது அதை திருப்பி தாருங்கள் எனக் கேட்டு எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். சமூக வலைத்தளங்களில் கொடி கட்டி பறந்த ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.

எலான் மஸ்க்: ஊழியர்கள் பணி நீக்கம், ட்விட்டர் நிறுவனத்தை எக்ஸ் என பெயர் மாற்றியது என ட்விட்டரை மொத்தமாக எலான் மஸ்க் தனது கைக்கு வந்த பிறகு மாற்றினார். பணம் பெற்று சப்ஸ்கிரைப் செய்தால் 'புளு டிக்' வசதி என எக்கச்சக்க மாற்றங்களை புகுத்தியுள்ளார் எலான் மஸ்க். சமீபத்தில் கூட ஒரு வசதியை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்.
அதிக சம்பளம் கொடுத்துவிட்டதாக: அதாவது, அனைவரும் பார்க்கும் வகையில் இருந்த லைக்ஸ் வசதியை, லைக் செய்பவர் மட்டுமே பார்க்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளார் எலான் மஸ்க். இப்படி எக்ஸ் நிறுவனமாக மாறியதில் இருந்தே அடிக்கடி ஏதாவது ஒரு மாற்றத்தை செய்து வருகிறார் எலான் மஸ்க்..
இந்தநிலையில்தான், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிலருக்கு அதிக சம்பளம் கொடுத்து விட்டதாகவும் அதை திருப்பி தாருங்கள் எனக் கேட்டு அதிர வைத்து இருக்கிறார் எலான் மஸ்க்.. ஆஸ்திரேலியாவை சேர்ந்த சில ஊழியர்களுக்குத்தான் இப்படியான ஒரு கோரிக்கையை வைத்து இருக்கிறதாம் எக்ஸ் நிறுவனம். இது தொடர்பாக நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு லீகல் நோட்டீசை எக்ஸ் நிறுவனம் அனுப்பியுள்ளதாம்.
6 பேருக்கு நோட்டீஸ்: அந்த நோட்டீசில், அமெரிக்க டாலரில் இருந்து ஆஸ்திரேலிய டாலருக்கு பணத்தை மாற்றும் போது சில தவறு ஏற்பட்டு விட்டதாகவும் இதனால், அதிகப்படியான தொகை வழங்கப்பட்டு விட்டது. ஆகவே அதிகப்படியான அந்த தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் 6 பேருக்கு இத்தகைய நோட்டீஸ் வந்திருக்கிறதாக சொல்லப்படுகிறது.
திருப்பி அனுப்புங்கள்: எகஸ் நிறுவனத்தின் ஹெச்.ஆர் துறையில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கும் அந்த மெயிலில், கடந்த ஜனவரி 2023-ல் குறிப்பிடும் படியாக அதிக தொகையை உங்களுக்கு கொடுத்துவிட்டோம். எனவே முடிந்த வரையில் இந்த பணத்தை திருப்பி அனுப்பினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்" என்று தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் அதிர்ச்சி: ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த போது வழங்கப்பட்டு இருந்த பங்குகள் தொடர்பான இழப்பீட்டிற்கு பணம் செலுத்தும் போதுதான் இப்படி அதிகப்படியாக பணத்தை செலுத்திவிட்டதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஊழியர்களுக்கு அளித்த பணத்தை எலான் மஸ்க் நிறுவனம் தற்போது மீண்டும் திருப்பி தருமாறு கேட்டு இருப்பது ஊழியர்களை தூக்கி வாரிப்போட்டுள்ளதாம்..
ட்விட்டர் நிறுவனத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் வாங்கிய போது ஊழியர்கள் பலருக்கும் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் வைத்திருப்பதாக பல்வேறு வழக்குகள் அந்த நிறுவனத்தின் மீது உள்ளன.


Click it and Unblock the Notifications
