"அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது.." அதிபராக பதவியேற்ற டிரம்ப் நாட்டு மக்களிடையே பேச்சு
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47ஆவது அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், அதன் பிறகு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாகத் தனது உரையை ஆரம்பித்த டிரம்ப், தனது ஆட்சியில் அமெரிக்காவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சீக்கிரமே அமெரிக்கா இதுவரை இல்லாத வகையில் வலிமையான நாடக மாறும் என்றும் டிரம்ப் பேசினார். .
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், இன்று அதிகாரப்பூர்வமாக அதிபராகப் பதவியேற்றார். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் டிரம்ப் அதிபராகப் பதவியேற்றார்.

டிரம்ப்:
அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதிபராகப் பதவியேற்ற பிறகு நாட்டு மக்களிடையே அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாகச் சொல்லி தனது உரையை ஆரம்பித்த டிரம்ப், தனது ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாளிலும் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான நாடாகச் சீக்கிரம் மாறும் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், "உலகெங்கும் இருந்து சட்டவிரோதமாகப் பல லட்சம் பேர் அமெரிக்காவுக்கு வருகிறார்கள். அது சீக்கிரமே தடுக்கப்படும்" என்றும் தெரிவித்தார். மேலும், இத்தனை காலம் அமெரிக்கா சரிவின் பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில், அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொற்காலம் தொடங்கிவிட்டது:
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "அமெரிக்காவின் பொற்காலம் இப்போதே தொடங்குகிறது. நமது நாடு செழித்து வளரும். மீண்டும் உலகெங்கும் மதிக்கப்படும் ஒரு நாடாக அமெரிக்கா உருவெடுக்கும். மற்ற ஒவ்வொரு நாடும் நம்மைக் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு வளர நடவடிக்கை எடுக்கப்படும். டிரம்ப் நிர்வாகத்தின் ஒவ்வொரு நாளிலும் அமெரிக்கா ஃபர்ஸ்ட் என்பதை மனதில் வைத்து முடிவெடுக்கப்படும்.
பல சோதனைகள்:
அமெரிக்காவின் 250 ஆண்டுக்கால வரலாற்றில் எந்தவொரு அதிபரும் எதிர்கொள்ளாத அளவுக்குப் பல சோதனைகளை நான் எதிர்கொள்ள நேரிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பென்சில்வேனியா மைதானத்தில் என்னைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. ஆனால் அப்போது நான் உணர்ந்தேன். எனது உயிர் ஒரு காரணத்திற்காகவே காப்பாற்றப்பட்டது. அது அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக மாற்றுவது. அமெரிக்காவை உலகின் சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே கடவுளால் நான் காப்பாற்றப்பட்டேன்.
பணவீக்க நெருக்கடி, எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியவை காரணமாக விலைவாசி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதனால்தான் இன்று தேசிய எரிசக்தி அவசரநிலையையும் அறிவிப்பேன். எரிசக்தி விலையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார வாகனங்களைக் கட்டாயமாக்கும் சட்டங்களை வாபஸ் பெறுவேன். இது அமெரிக்க ஆட்டோமொபைல் துறைக்கு மிகப் பெரிய சாதகமாகவே இருக்கும்.
சட்டவிரோத குடியேற்றம்
இன்று நான் வரலாற்றுச் சிறப்புமிக்க பல நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளேன். அமெரிக்காவைக் காப்பாற்றவும் மறுசீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்துவேன். சட்டவிரோத உள்ளே நுழைய முயல்வோரைத் தடுத்து நிறுத்துவேன். அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி இருப்போரை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்புவேன். இதற்காக ஏலியன் எனிமி சட்டத்தைப் பயன்படுத்த உள்ளேன்" எனப் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications