சுந்தர் பிச்சை சார்! உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? தீபாவளியை இப்படியா கொண்டாடுறது?
வாஷிங்டன்: கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி (Google CEO) சுந்தர் பிச்சையின் வீட்டில் எப்படி தீபாவளி கொண்டாடியுள்ளார் என்பதை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். பண்டிகையிலும் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லார் வீடுகளிலும் பட்டாசு, இனிப்பு, புத்தாடை என களைகட்டியுள்ளது. மாலை நேரத்தில் வீடுகளில் தீப ஒளி ஏற்றி வைத்து மக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
உலக தலைவர்கள் வாழ்த்து
அந்த வகையில் உலக தலைவர்களான பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபோட் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டா பதிவு போட்ட சுந்தர் பிச்சை
இந்த நிலையில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, தான் எப்படி தீபாவளியை கொண்டாடினேன் என்பதை தனது இன்ஸ்டா போஸ்ட்டில் விவரித்துள்ளார்.
ஒளி வீசட்டும்
இவர் தனது இன்ஸ்டா பதிவில் கூறியிருப்பதாவது: எங்கள் வீட்டில் பர்ஃபிக்களை பரிமாற ஒரே வழி இதுதான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ள அவர் , அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். உங்கள் வீட்டில் மகிழ்ச்சி, ஒளி பரவட்டும், பண்டிகை விருந்து நிறைந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
தீபாவளி வாழ்த்து
இவரது இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுந்தர் பிச்சைக்கும் பலர் தீபாவளி வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். பண்டிகையாக இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணம் சுந்தர் பிச்சையின் மனதில் எப்போதும் இருக்கிறது என்பதையே அவரது பதிவு பிரதிபலிக்கிறது என்கிறார்கள்.
கலர் கலர் பர்பி
ஒரு பிளேட்டில் சிகப்பு, மஞ்சள், பச்சை, நீலம் ஆகிய நிறங்களால் ஆன பர்ஃபியை கூகுளின் முதல் எழுத்தான 'G' வடிவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றி லட்டு, முந்திரி கேக் வைத்து அகல் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது. கோலம் போடப்பட்டு, பூக்களால் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அண்மையில் ஒரு பேட்டி அளித்தார். அதில் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் பெனியோஃப் உடனான உரையாடலில் சுந்தர் பிச்சை மனம் திறந்து பேசியுள்ளார்.
தென்னிந்தியாவை கடந்து செல்லும் ரயில் பயணம்
அப்போது அவர் கூறுகையில் நான் சிறுவயதில் தென்னிந்தியாவை கடந்து செல்லும் ரயில் பயணத்தில் விசாகப்பட்டினம் என்ற ஒரு அழகான கடற்கரை நகரத்தை கடந்து செல்வேன். எப்போதும் ஒரு சிறப்பு என பகிர்ந்த அவர் "அந்த காலத்தில் தொழில்நுட்பத்துக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு ரோட்டரி போன் வாங்கவே ஐந்து ஆண்டுகள் காத்திருந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் நிறுவனம்
சமீபத்தில் கூகுள் நிறுவனம், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 60 ஆயிரம் கோடி) முதலீடு செய்வதாக அறிவித்தது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்தில் உலகிலேயே மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டரை அமைக்கவுள்ளது.
ஏஐ செயற்கை நுண்ணறிவு
இது அமெரிக்காவுக்கு வெளியே கூகுளின் மிகப்பெரிய AI ஆகும் என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக அழைத்து பெருமை அளித்ததாக சுந்தர் பிச்சை கூறினார்.












Click it and Unblock the Notifications