கூகுளுக்கு வந்த சிக்கல்.. H 1B விசாவால் கொந்தளித்த ஊழியர்கள்.. டிரம்புக்கு எகிறப்போகும் பிரஷர்
வாஷிங்டன்: வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்காக வழங்கப்படும் எச் 1 பி விசா (H 1B) விசாவுக்கான கட்டணத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ.88 லட்சமாக உயர்த்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூகுள் நிறுவன ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்து அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களின் பக்கம் கூகுள் நிற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இது கூகுள் நிறுவனம் மட்டுமின்றி டிரம்புக்கு வரும்காலத்தில் பிரஷரை ஏற்படுத்தலாம்.
வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்றும் வகையில் எச் 1 பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதன் காலஅவகாசம் 3 ஆண்டுகளாகும். அதன்பிறகு 3 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.1.75 லட்சமாக இருந்தது. ஆனால் இந்த கட்டணத்தை டொனால்ட் டிரம்ப் ரூ.88 லட்சமாக அதிகரித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களின் பணி அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் இந்த கட்டண உயர்வு என்பது தற்போது எச் 1பி விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது. புதிதாக எச் 1பி விசாவிற்கு விண்ணப்பம் செய்வோருக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி இந்தியா உள்பட பிற நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்ற விரும்பும் திறமைசாலிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரூ.88 லட்சம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அவர்களால் எச் 1பி விசாவை பெற்று அமெரிக்கா செல்ல முடியும். இது பெரும் தொகை என்பதால் அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவில் இருப்போருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியர்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள உள்ளனர்.
ஏனென்றால் அமெரிக்காவின் எச் 1பி விசா திட்டத்தில் இந்தியர்கள் தான் அதிகம் பயனடைந்து வருகின்றனர். எச் 1பி விசாவை அமெரிக்காவில் பயன்படுத்தும் வெளிநாட்டை சேர்ந்தவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இதனால் இந்த நடவடிக்கை இந்தியாவை குறிவைத்தே டிரம்ப் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் எச் 1பி விசா கட்டண உயர்வை எதிர்த்து கூகுள் நிறுவன ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டனில் உள்ள கூகுள் அலுவலகத்தின் முன்பு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ‛‛எச் 1பி விசா கட்டணத்தை 6,600 சதவீதம் வரை டிரம்ப் உயர்த்தி உள்ளார்'' என்று குற்றம்சாட்டினர்.
மேலும் தொழிற்சங்க தலைவர் பாருள் கவுல் கூறுகையில், ‛‛ உலகில் செயல்படும் பெரிய நிறுவனங்களில் கூகுள் ஒன்றாக உள்ளது. ஆனால் அவர்கள் இதுபற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து தங்கள் நிறுவனத்துக்கு வந்து பணி செய்யும் ஊழியர்களின் பக்கம் நிற்பதை அவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை'' என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அதேபோல் கூகுளில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் 29 வயது நிரம்பிய டின் டிராவர்ஷி, ‛‛அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக கூகுள் உள்ளது. அவர்களால் புலம்பெயர் ஊழியர்களின் பக்கம் நின்று நிறுவனத்தை வளர்க்க முடியாதா?'' என்று கூறினார். கூகுள் நிறுவனத்தை எடுத்து கொண்டால் அமெரிக்கர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பலரும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட இந்தியர்கள் உள்பட பிற நாட்டினரின் பங்கு அளப்பரியது. இதனால் தான் டிரம்பின் எச் 1பி விசா கட்டண உயர்வுக்கு எதிராக கூகுள் நிறுவனம் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இது கூகுள் நிறுவனத்துக்கு பிரஷரை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து இதுபோன்ற போராட்டம் கூகுள் போன்று பிற அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களிலும் நடக்கும் பட்சத்தில் டிரம்புக்கும் அழுத்தம் ஏற்படலாம் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications