அம்மாடியோவ்.. "ரூ. 16 லட்சம்.." வாரி கொடுக்கும் சாட் ஜிபிடி! ஈஸியாக சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏஐ உருவாக்கியுள்ள சாட் ஜிபிடி நிறுவனம் தான் இப்போது உலகெங்கும் பெரிய பேச்சாக இருக்கிறது. இதனிடையே இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் எங்குத் திரும்பினாலும் சாட் ஜிபிடி குறித்தே பேச்சாக இருக்கிறது. கடந்தாண்டு இறுதியில் வெளியான சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது இங்கே தோன்றிய முதல் ஏஐ கருவி இல்லை என்றாலும் கூட நாம் இதுவரை பார்த்ததில் மிகவும் வலிமையான ஏஐ கருவியாக இந்த சாட் ஜிபிடி இருக்கிறது. நாம் என்ன கேட்டாலும் அதற்கு இது பதில் சொல்கிறது.
சாட் ஜிபிடி: பல்வேறு துறைகளின் டேட்டாக்கள் இதற்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மிகவும் அறிவார்ந்த ஒரு நபரைப் போலவே இது பதிலளிக்கிறது. இது மட்டுமின்றி எதாவது ஜோக் கேட்டால் ஜோக் சொல்கிறது.. எதாவது காமெடி கேட்டால் காமெடி சொல்லும். அவ்வளவு ஏன் நீங்கள் லவ் லெட்டர் கேட்டால் கூட இது பக்காவான காதல் கடிதம் ஒன்றை எழுதித் தரும். அந்தளவுக்கு மிகவும் வலிமையான ஒரு ஏஐ கருவியாக சாட் ஜிபிடி இருக்கிறது.

மேலும், மருத்துவம் தொடங்கி சட்டம் வரை பல தேர்வுகளைத் தேர்ச்சி பெறவும் கூட இந்த சாட் ஜிபிடி நமக்குப் பயன்படுகிறது. அவ்வளவு ஏன் சமீபத்தில் பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதியும் ஒரு வழக்கில் ஜாமீன் வழங்குவதில் சாட் ஜிபிடியிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அந்தளவுக்கு சாட் ஜிபிடி பயன்பாடு அதிகரித்தே வருகிறது. இந்த சாட் பிஜிடியை வைத்து 20 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 16 லட்சம் சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆனால், அது உண்மை தான்.
ஈஸியாக சம்பாதிக்கலாம்: ரூ. 16 லட்சம் சம்பாதிக்கும் வாய்ப்பை சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம் அளித்துள்ளது. அது எப்படி எனக் கேட்கிறீர்களா.. வாங்கப் பார்க்கலாம்.. சாட் ஜிபிடி தளத்தில் உள்ள புகார்கள் அல்லது சிக்கல்களைக் கண்டறிந்து சொல்லும் பயனர்களுக்கு $ 20,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 லட்சம் வரை வெகுமதியை வழங்குவதாக சாட் ஜிபிடி அறிவித்துள்ளது.

இதற்காக OpenAI Bug Bounty என்ற புதியதொரு திட்டத்தை அறிவித்துள்ளார்.. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதில் சாட் ஜிபிடியில் இருக்கும் பிழைகளைக் கண்டறிந்து புகார் அளிப்போருக்கு, அவர்கள் சொல்லும் குறைகளைப் பொறுத்து வெகுமதி அளிக்கப்படும் என்று ஓபன் ஏஐ அறிவித்துள்ளது. சின்ன மிஸ்டேக்குகளுக்கு 200 டாலர் முதல் பெரிய பிழைகளுக்கு அதிகபட்சம் 20 ஆயிரம் டாலர் வரை வெகுமதி வழங்க முடிவு செய்துள்ளனர்.வெளிப்படைத்தன்மை தேவை: ஏஐ தொழில்நுட்பத்தில் இருக்கும் பாதிப்புகளைக் கண்டறிவதற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு முக்கியம் என்று தாங்கள் நம்புவதாகவும் இதன் காரணமாகவே இப்படியொரு திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஓபன் ஏஐ தலைவர் மெத்யூ நைட் கூறுகையில், "பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட ஏஐ கருவியை உருவாக்க வண்டும் என்பதே எங்கள் இலக்கு. இதற்காகவே இந்த திட்டத்தை நாங்கள் அறிவித்துள்ளோம். பாதுகாப்பான மற்றும் நம்பகமான தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை நாங்கள் உருவாக்க விரும்பும் நிலையில், இதற்குப் பயனாளர்களின் உதவியும் தேவை" என்று கூறியுள்ளனர்.
வழக்கமான ஒன்றுதான்: பெருநிறுவனங்கள் இதுபோன்ற வெகுமதி திட்டங்களை அறிவிப்பது வழக்கமான ஒன்று தான். தங்கள் சாப்ட்வேரில் இருக்கும் பிழைகளைக் கண்டறிய இதுபோன்ற திட்டங்களை அவர்கள் பயன்படுத்துவார்கள். கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களும் முன்பு இதுபோன்ற திட்டங்களை அறிவித்துள்ளன. சாட் ஜிபிடி அமைப்பில் இருக்கும் பிழைகளை கண்டறிந்து புகாரளிக்க ஆய்வாளர்களை அழைப்பதாக ஓபன் ஏஐ நிறுவனம் அழைத்துள்ளது.
அதேநேரம் தீய நோக்கத்திற்காக ஹேக் செய்பவர்களுக்கு எந்தவொரு வெகுமதியும் வழங்கப்பட மாட்டாது என்பதையும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். ஏற்கனவே இதுபோல ஒரு திட்டத்தை அறிவிப்பது குறித்து தீவிரமா ஆலோசித்து வருவதாக ஓபன் ஏஐயின் தலைவரும் இணை நிறுவனருமான கிரெக் ப்ரோக்மேன் கூறியிருந்தார். இந்தச் சூழலில்தான் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோடிங்கில் ஆர்வம் உள்ளோர் இப்போதே உள்ளே இருக்கும் பிழைகளைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications