‛ஓ மை காட்’.. ரூ.3.32 லட்சத்தை தின்று ஏப்பமிட்ட செல்லநாய்! இப்படியுமா நடக்கும்? அதிர்ச்சியில் தம்பதி
வாஷிங்டன்: வீட்டில் செல்லமாக வளர்த்த நாய் ஒன்று ரூ.3.32 லட்சம் பணத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு எஜமானுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? என்பது பற்றிய தகவல் வருமாறு:
நம்மில் பலரும் வீடுகளில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறோம். இதன் மீது அளவு கடந்த பாசம் நாம் வைப்பதன் காரணமாக அது குடும்பத்தின் ஒரு உறுப்பினர் போல் அனைத்து இடங்களிலும் இயல்பாக வலம் வரும்.

இது ஒவ்வொருவருரின் பெருந்தன்மையை காட்டும் வகையிலும் இருந்தாலும் கூட நாம் செல்ல பிராணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் நம் முதலுக்கே நஷ்டத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்கு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் கிளேட்டன். இவரது மனைவி கேரி லா. இந்த தம்பதி கோல்டன்டூடுல் எனும் இனத்தை சேர்ந்த நாயை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதற்கு செசில் என பெயரிட்டுள்ளனர். குடும்பத்தின் ஒரு அங்கமாகவே செசில் மாறிப்போனது. வீட்டில் அனைத்து இடங்களிலும் செசில் உலா வரும். மேலும் வீட்டில் இருக்கும் சோஃபா, மெத்தைகளில் கூட ஏறி இந்த செசில் அமர்ந்து குட்டி தூக்கம் போடும்.
இந்நிலையில் தான் கிளேட்டன்- கேரி லா தம்பதி தங்களின் நிலத்தில் வேலி அமைக்க திட்டமிட்டனர். இதுதொடர்பாக ஒப்பந்ததாரரிடம் அவர்கள் பேசினர். இதையடுத்து வேலி அமைத்த பிறகு ஒப்பந்ததாரருக்கு வழங்க 4 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர்கள் எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்தனர். 4 ஆயிரம் அமெரிக்க டாலர் என்பது இந்திய ரூபாயில் சுமார் ரூ.3.32 லட்சமாகும்.

இத்தகைய சூழலில் கிளேட்ட- கேரி லா தம்பதி வீட்டின் மற்றொரு அறையில் இருந்தனர். அப்போது அமெரிக்க டாலர் இருந்த பையை அவர்கள் செல்லமாக வளர்த்த நாய் செசில் அந்த பையை கடித்து இழுத்துள்ளது. அதன்பிறகு பையில் இருந்த அமெரிக்க டாலர்களை எடுத்து செசில் வாயில் வைத்து கடித்து மென்று தின்றது. மேலும் அமெரிக்க டாலர்களை கடித்து கிழித்து வீடு எங்கும் போட்டு இருந்தது. இதற்கிடையே வெளியே சென்ற கிளேட்டன் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது டாலர்கள் கிழிந்து போய் சிதறிக்கிடந்தன. மேலும் நாய் அதனை மென்று தின்பதை அவர் பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தியதோடு சம்பவம் குறித்த மனைவி கேரி லாவிடம் கூறினார்.
இதையடுத்து செசிலை அங்கிருந்து அவர்கள் விரட்டினர். அப்போது மொத்தம் ரூ.3.32 லட்சம் மதிப்பிலான 4 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அது தின்று ஏப்பமிட்டு இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த தம்பதிக்கு இழப்பு அதிகம் ஏற்பட்டு இருந்ததை நினைத்து அவர்கள் கவலைப்பட்டாலும் கூட அவர்கள் செல்லமாக வளர்த்த வாயில்லா ஜீவனை துன்புறுத்தவில்லை. மாறாக செசிலை கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்று டாலரை தின்றுள்ளதால் உடல்நல பாதிப்பு எதுவும் ஏற்படுமா? என பரிசோதனை செய்தனர். அப்போது செசிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததும், வரும் நாட்களில் பிரச்சனை எதுவும் வராது எனவும் டாக்டர் கூறினார்.
இதையடுத்து கிளேட்டன்-கேரிலா தம்பதி சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி சம்பவம் குறித்து தெரிவித்தனர். அப்போது இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றனர். டாலரில் இருந்த சீரியல் எண்கள் இருந்தால் அதற்கான பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தம்பதி ஓரளவு நிம்மதியடைந்த நிலையில் செசில் கிழித்து போட்ட டாலர்களை சேகரித்து அவற்றை செல்லும் வகையிலான பணமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி கேரிலா கூறுகையில், ‛‛செசில் 4 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கடித்து சேதப்படுத்தி உள்ளது. இதனை கேட்டதும் எனக்கு மாரடைப்பு ஏற்படுவது போல் உணர்ந்து அதிர்ச்சிக்குள்ளாகினேன். செசில் பொதுவாக இப்படி எதையும் செய்யாது. இறைச்சியை மேஜையில் வைத்தால் கூட அதனை சாப்பிடாது. ஆனால் முதல் முறையாக செசில் இப்படி செய்துள்ளது. '' என்றார்.












Click it and Unblock the Notifications