33,000 கோடியில் ஹண்டர் ட்ரோன்கள்.. அமெரிக்கா - இந்தியா இடையே உறுதியாகிறது மெகா ஒப்பந்தம்
வாஷிங்டன்: மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். மோடியின் இந்த பயணத்தில், 33,000 கோடியில் எம்.கியூ -9 ஹண்டர் கில்லர் என்று அழைக்கப்படும் அதி நவீன டிரோன்களை வாங்க அமெரிக்கா - இந்தியா இடையே மெகா ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். வரும் 23 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்றுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று அமெரிக்காவில் நடந்த குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். உலகலாவிய பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், "இந்தியா உடனான அமெரிக்க உறவு வலுவானதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேசுகிறோம் " என்றார்.
இந்த சந்திப்புக்கு பிறகு ட்விட் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 'அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது' என்று கூறியிருந்தார். மோடியின் அமெரிக்க பயனத்தில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக 33,000 கோடியில் ஹண்டர் ட்ரோன்கள் வாங்க அமெரிக்கா - இந்தியா இடையே மெகா ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், விரைவில் கையெழுத்து ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவிடம் இருந்து 33,500 கோடி மதிப்பில் எம்.கியூ -9 ஹண்டர் கில்லர் என்று அழைக்கப்படும் அதி நவீன டிரோன்களை வாங்க ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. ஒப்பந்தத்தின்படி ட்ரோன்களை பராமரித்தல், பழுது பார்த்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக இந்தியாவில் அமெரிக்கா மையம் ஒன்றை அமைக்க உள்ளது. அதோடு டிரோன்களை இயக்குவதற்கான பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோ பேடன் பிரதமர் மோடி சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த டீல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியா தனது ஆயுதப் படையின் பலத்தை மேலும் பலப்படுத்தும் விதமாக இந்த ட்ரோன்களை வாங்க முடிவு செய்து இருக்கிறது. குறிப்பாக சீனா எல்லையில் ஊடுறுவாமல் இருப்பதை கண்காணிக்க இந்த ட்ரோன்கள் பயன்படும்.
அமெரிக்காவின் டிரோன்கள் போர் விமானங்களுக்கு நிகராக பறக்கக்கூடிய திறன் கொண்டது. 40 மணி நேரம் தொடர்ந்து பறக்கக்கூடிய திறன் கொண்டவை இந்த டிரோன்கள். இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்து முயன்று வருகிறது. அவ்வப்போது ஆய்வு கப்பல்களை அனுப்பி பிராந்திய அச்சுறுத்தலை ஏற்படுத்த முயல்கிறது. இத்தகைய சூழலில்தான் ஆளில்லா இந்த ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்க முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications