டிரம்பை சமாளிக்க இந்தியா செய்த செயல்.. வெள்ளை மாளிகையில் மிக முக்கிய மாற்றம்! பாகிஸ்தானுக்கு செக்?
வாஷிங்டன்: டிரம்ப்பின் சமீபத்திய நடவடிக்கைகளால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே டிரம்ப்பைச் சமாளிக்க இந்தியா மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் இந்தியா நடத்தும் பேச்சுவார்த்தை முறையே மாறப் போகிறது.
டிரம்ப் இந்தியா மீது இஷ்டத்திற்கு வரி விதித்து வருகிறார். ஏற்கனவே அவர் அறிவித்த 25% வரி அமலுக்கு வந்துவிட்டது. கூடுதல் 25% வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த வரி 50%ஆக உயரும். ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்குவதாகச் சொல்லி டிரம்ப் இந்த வரிகளை விதித்திருந்தார். டிரம்ப் இதுபோல இஷ்டத்திற்குச் செய்யும் செயல்களால் இந்தியா அமெரிக்கா உறவு கடுமையாகப் பாதிக்கிறது.

இந்தியா எடுத்த நடவடிக்கை
இதற்கிடையே இதைச் சமாளிக்க இந்தியத் தூதரகம் அமெரிக்காவில் தனது இரண்டாவது லாபி நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம், அமெரிக்காவில் இந்தியாவிற்காக லாபிங், ஊடக உறவுகள், சமூக ஊடக வியூகம் மற்றும் விளம்பரம் போன்ற சேவைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியத் தூதரகம் மெர்குரி பப்ளிக் அஃபயர்ஸ் நிறுவனத்துடன் ஆகஸ்ட் 15 முதல் மூன்று மாதங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு மாதம் $75,000 டாலர், அதாவது சுமார் இந்திய மதிப்பில் ரூ.65 லட்சத்தைச் செலுத்துகிறது..
மெர்குரியின் பாட்ர்னர்களான டேவிட் விட்டெர் (டிரம்பின் குடியரசுக் கட்சி மாஜி எம்பி) மற்றும் பிரையன் லான்சா (2020 டிரம்ப் குழுவின் தகவல் தொடர்பு இயக்குநர்) ஆகியோர் இந்தியாவிற்காக இருப்பார்கள். இவர்களுடன் நியூயார்க் மாகாண செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கரான கெவின் தாமஸ் உட்பட நான்கு பேர் கொண்ட குழு இந்தியாவுக்காகப் பேசும்.
லாபி செய்வது என்றால் என்ன
அமெரிக்காவில் தனிநபர்கள், நிறுவனங்கள் அரசு முடிவுகள் அல்லது சட்டங்கள் குறித்து அரசியல்வாதிகளுடன் பேசி கொள்கை சார்ந்த முடிவை மாற்ற முயல்வார்கள். இதற்கு "லாபி செய்தல்" என்று பெயர். இதற்காக லாபி செய்பவர்கள் எம்பிக்கள் அல்லது அரசு அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் லாபி செய்பவர்கள் ஒரு தரப்பிடம் கட்டணத்தை வாங்கிக் கொண்டு, அவர்களுக்காக அமெரிக்க அரசு அதிகாரிகள், அமெரிக்க எம்பிக்கள் அல்லது அமெரிக்க அரசியல்வாதிகளுடன் பேசுவார்கள். குறிப்பிட்ட சட்டங்கள் அல்லது கொள்கைகளில் அவர்களின் நிலைப்பாட்டை மாற்ற இதுபோல லாபி செய்வார்கள். நேரடிச் சந்திப்பு, செல்போன் உரையாடல், கடிதம் எனப் பல வகைகளில் லாபி செய்வார்கள்.
அமெரிக்கச் சட்டம்
இது சட்டவிரோதம் இல்லையா என நீங்கள் கேட்டால்.. அமெரிக்காவில் இது சட்டவிரோதம் இல்லை. லாபி செய்வது ஒரு பேச்சுச் சுதந்திரமாகவே அமெரிக்காவில் கருதப்படுகிறது. சட்டரீதியாகவும் லாபி செய்வதற்குப் பாதுகாப்பு இருக்கிறது. அதேநேரம் பணம் அல்லது முறைகேடாக கிப்ட்டை கொடுக்கக்கூடாது.. தங்கள் தரப்பு நியாயத்தை மட்டுமே எடுத்துச் சொல்ல வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகள் உள்ளன.
வெள்ளை மாளிகையில் மாற்றம்
இதற்காகவே இந்திய அரசு இப்போது மெர்குரி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த மெர்குரி நிறுவனத்திற்கும் டிரம்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. டிரம்ப்பின் நிர்வாகத்தில் முக்கிய அதிகாரியாக இருக்கும் சுசி வைல்ஸ், 2024ம் ஆண்டு நவம்பர் வரை இந்த மெர்குரி நிறுவனத்தில் லாபிஸ்டாக இருந்தார். அதன் பிறகே டிரம்ப் அதிபரான பிறகு அவரது நிர்வாகத்தில் இணைந்தார்.
அதேபோல இந்தியா சார்பில் லாபி செய்யப்போகும் லான்சா 2016 காலத்திலேயே டிரம்ப் டீமில் துணைத் தகவல் தொடர்பு இயக்குநராகப் பணியாற்றினார். மேலும், இவர் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எம்பியான போதும் செனட் பிரச்சாரத்திற்கும் ஆலோசகராக இருந்தார். இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் இப்போது இந்தியா சார்பில் வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் லாபி செய்வார்கள்.
பாகிஸ்தானுக்கு செக்
முன்னாள் டிரம்ப் காவலர் கீத் ஷில்லர் தலைமையிலான ஒரு நிறுவனத்தை லாபி செய்ய சமீபத்தில் பாகிஸ்தான் ஒப்பந்தம் போட்டது. இந்தியா போதிய நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தியா கடந்த ஏப்ரலில் முன்னாள் டிரம்ப் உதவியாளர் ஜேசன் மில்லரின் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்திருந்தது. இந்தச் சூழலில் தான் இந்தியா கூடுதல் லாபி நிறுவனத்தை நியமித்துள்ளது.
மில்லரின் நிறுவனத்துடன் இந்தியா ஒரு வருடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு மாதம் $150,000 டாலர், அதாவது ரூ.1.3 லட்சத்தை இந்தியா கட்டணமாகச் செலுத்துகிறது. இந்தச் சூழலில் தான் 2வது லாபி நிறுவனத்தையும் இந்தியா நியமித்துள்ளது. அதேநேரம் வெவ்வேறு பணிகளைச் செய்வதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட லாபி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்படுவது அமெரிக்காவில் வழக்கமானது தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications