18,000 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா? டிரம்ப் எடுக்கும் முடிவு.. இந்தியாவின் பிளான் இதுதான்
வாஷிங்டன்: சட்டவிரோதமாக குடியேறி உள்ள வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அதன்படி முதற்கட்டமாக அமெரிக்காவில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்படலாம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். இவர் தனது பிரசாரத்தின்போதே அமெரிக்காவில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நுழைகின்றனர். இதனால் சட்டவிரோத குடியேற்றம் அதிகரிப்பதோடு, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் வெளிநாட்டினரால் பறிக்கப்படுகிறது. இதனால் நான் அதிபர் ஆனதும் சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பேன். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார். இது அமெரிக்கர்கள் இடையே டொனால்ட் டிரம்புக்கான ஆதரவை அதிகரித்தது.
அதன்படி டொனால்ட் டிரம்ப் தற்போது அதிபர் ஆன நிலையில் முதற்கட்டமாக அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் எமர்ஜென்சியை அமல்படுத்தி உள்ளார். இந்த எல்லை வழியாக தான் ஏராளமானவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவார்கள். இந்த எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, விரைவில் தடுப்பு சுவர் கட்டப்பட உள்ளது. டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் முடிவில் உள்ளார்.
அந்த வகையில் 18 ஆயிரம் இந்தியர்கள் முதற்கட்டமாக அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா மேற்கொண்ட ஆய்வில் இது உறுதியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்காவுடன் சேர்ந்து நம் நாடு ஈடுபட தயாராக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் உள்ளது. ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் தன்னுடன் மோதலை கடைப்பிடிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்க முடிவு செய்துள்ளார். இதனால் டொனால்ட் டிரம்புடன் இணக்கமாக செயல்பட நம் நாடு முடிவு செய்துள்ளது. அதோடு இருநாடுகள் இடையேயான வர்த்தக போரை தவிர்க்கவும் நம் நாடு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை அங்கு ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி பார்த்தால் அமெரிக்கா மொத்தம் 3 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு எச் 1 பி விசாக்களை வழங்கியது. இதில் நான்கில் 3 பங்கு விசாவை இந்தியர்கள் தான் பெற்றனர். இந்த எச்1 பி விசா என்பது அமெரிக்காவில் வேலைக்கு செல்லும் மாணவர்கள், பட்டதாரிகள், இன்ஜினியர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும்.
இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‛‛ குடியேற்றம் மற்றும் போக்குவரத்து தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவுக்கு, இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் செயல்பாட்டில் இருநாடுகளும் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல் இந்தியாவில் இருந்து அதிகமானவர்கள் அமெரிக்காவுக்கு சட்டப்பூர்வமாக செல்வதற்கான வழிகளை ஏற்படுத்தவும் செயல்பட்டு வருகிறோம்’’ என்றார்.












Click it and Unblock the Notifications