இந்தியா- அமெரிக்கா வர்த்தக டீலில் திடீர் மாற்றம்! இதனால் உண்மையில் யாருக்கு லாபம்?
டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், சில நாட்களிலேயே அதில் சில மாற்றங்களைச் செய்த அமெரிக்கா மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த மாற்றம் எதற்காகச் செய்யப்பட்டது என்பது குறித்தும் இது இந்தியாவுக்குச் சாதகமாக இல்லையா என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.
இந்தியா அமெரிக்கா இடையே கடந்தாண்டு முதல் வர்த்தக மோதல் இருந்தது. இதனால் இந்தியா சுமார் 50% வரை வரியை எதிர்கொண்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு முதலில் பிப்ரவரி 6ம் தேதி வெளியானது. இருப்பினும், சில நாட்களிலேயே அதிலிருந்த சில வாக்கியங்கள் திருத்தப்பட்டன.

வெளியுறவு அமைச்சகம்
இதற்கிடையே வெளியுறவுத் துறை அமைச்சகம் இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், இந்தியா - அமெரிக்கா இடைக்கால வர்த்தகக் கட்டமைப்பு குறித்து வெள்ளை மாளிகையின் திருத்தப்பட்ட விளக்கக் குறிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான அடிப்படைப் புரிதலை எந்த வகையிலும் மாற்றவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே கூட்டு அறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.
பரஸ்பர நன்மை
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறுகையில், "பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தகத்திற்கான இடைக்கால ஒப்பந்தம் குறித்த இந்தியா- அமெரிக்கா கூட்டு அறிக்கை கடந்த பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டு அறிக்கை தான் இந்த வர்த்தகக் கட்டமைப்பிற்கான அடிப்படை.. இதுவே எங்கள் பரஸ்பரப் புரிதலின் ஆதாரமாகத் தொடர்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இரு நாடுகளின் புரியலின் அடிப்படையிலேயே வர்த்தக ஒப்பந்தத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியது.
முக்கிய மாற்றங்கள்
இந்தியா அமெரிக்கா இடையே முதலில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிக்கை வெளியானது. இருப்பினும், அதில் விவசாயம், கொள்முதல் தொடர்பாக இருந்த சில பாயிண்டுகள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்தே அந்த பாயிண்டுகளை மாற்றி அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றொரு அறிக்கையை வெளியிட்டது. அதில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்தங்கள், இந்தியாவின் நிலைப்பாடுகளைப் பாதுகாக்கும் விதமாக அமைந்துள்ளன.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில விவசாயப் பொருட்களுக்கு வரியைக் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த வரி குறைப்பு பட்டியலில் "குறிப்பிட்ட பருப்பு வகைகள்" என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. அந்த வார்த்தை இப்போது நீக்கப்பட்டுள்ளது. எனவே, பருப்பு வகைகளுக்கு இந்தியா வரியைக் குறைக்காது. இதன் மூலம் இந்திய விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்.
500 பில்லியன் டாலர்
அதேபோல அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியா "வாங்க உறுதிபூண்டுள்ளது" என்ற வாக்கியம், "வாங்க உத்தேசித்துள்ளது" என மாற்றப்பட்டது. அதாவது முன்பு 500 பில்லியன் டாலர் பொருட்களை இந்தியா நிச்சயம் வாங்கும் என்று இருந்த நிலையில், அது வாங்கலாம் என மாற்றப்பட்டுள்ளது.
மேலும், திருத்தப்பட்ட விளக்கக் குறிப்பில், இந்தியா கொள்முதல் செய்யவிருக்கும் துறைகளில் விவசாயப் பொருட்களின் பட்டியல் நீக்கப்பட்டது. அத்துடன், "இந்தியா தனது டிஜிட்டல் சேவைகள் வரிகளை நீக்கும்" என்ற வாக்கியம் மாற்றப்பட்டு, "வலுவான இருதரப்பு டிஜிட்டல் வர்த்தக விதிகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா உறுதியளித்துள்ளது" என மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications