ட்ரம்புக்கு போட்டியாக ‘இந்திய வம்சாவளி’ பெண்மணி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் நிக்கி ஹேலி!
அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான நிக்கி ஹேலி குதித்துள்ளார்.
வாஷிங்டன் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அரசியல்வாதியான நிக்கி ஹேலி டொனால்ட் டிரம்பிற்கு போட்டியாக 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஏற்கனவே அறிவித்துவிட்டார். அமெரிக்காவில் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் சார்பில், அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.

கட்சி மாநாட்டில், தேர்வு செய்யப்பட்ட பிரநிதிகள் பங்கேற்று, தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள். ஏற்கனவே முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பாக களத்தில் இருக்கும் நிலையில், குடியரசு கட்சியின் மூத்த நிர்வாகியான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலியும் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் குதித்துள்ளார்.
நிக்கி ஹேலி அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக இரண்டு முறை செயல்பட்டுள்ளார். மேலும் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது 2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை ஐநா சபைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
1960களில் நிக்கி ஹேலியின் தந்தை அஜித் சிங் ரந்தாவா மற்றும் தாய் ராஜ் கவுர் ஆகியோர் முதலில் கனடாவில் குடியேறிய நிலையில், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிக்கி ஹேலியின் தந்தை பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். அவரது தாயார் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
கடந்த 2011ஆம் ஆண்டு நிக்கி ஹேலி தெற்கு கரோலினா ஆளுநராகப் பதவியேற்றபோது அவருக்கு 39 வயது. அமெரிக்காவின் இளம் வயது ஆளுநராக ஹேலி இருந்தார். மேலும் தெற்கு கரோலினாவின் முதல் பெண் ஆளுநராகவும் வரலாறு படைத்தார். குடியரசுக் கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் ட்ரம்பை எதிர்த்து நிக்கி ஹேலி தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications