அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை.. உணவு டெலிவரி செய்த இடத்தில் நடந்த கொடூரம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ரவி தேஜா மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு டெலிவரி செய்யும் பணியை பார்ட் டைமாக செய்து வந்த போது, மர்ம நபர்கள் ரவி தேஜாவை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
தெலங்கானா மாநில சைதன்யாபுரி பகுதியைச் சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் மேல்படிப்புக்காக 2022ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றவர். இவர் தனது படிப்பை முடித்த பின், அங்கேயே இருந்து வேலை தேடி கொண்டிருந்துள்ளார். அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட வேண்டும் என்று முடிவு செய்த அவர், வேலை கிடைத்த பின் தனது பெற்றோரையும் அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்.

சரியான வேலை கிடைக்காததால், பார்ட் டைம் பணியாக உணவு டெலிவரியை செய்து வந்துள்ளார். அப்படி நேற்று உணவு டெலிவரி செய்வதற்காக சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் ரவி தேஜாவை சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரவி தேஜாவின் தந்தை சந்திரமெளலி பேசுகையில், அதிகாலை 4 மணிக்கு எனது செல்ஃபோனுக்கு அழைப்பு வந்த போதே ஏதோ தவறு நடந்துள்ளது என்று உணர்ந்தேன்.
என் மகனுடன் தங்கியுள்ள நபர்கள் தான் இந்த தகவலை என்னிடம் கூறினர். என்னால் எதுவும் பேச முடியவில்லை. எந்த தந்தைக்கும் இப்படியொரு நிலைமை ஏற்படக் கூடாது. கடைசியாக என் மகளின் பட்டமளிப்பு விழாவுக்காக அமெரிக்கா சென்றிருந்தோம். அதன்பின் மகனை பார்க்க முடியவில்லை. ஒருமுறை என் மகனின் முகத்தை பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அமெரிக்காவில் படித்து வரும் ரவிதேஜாவின் சகோதரி ஷ்ரியா பேசுகையில், கடந்த மாதம் தான் ரவி தேஜா அண்ணன் 25 வயதை எட்டினான். வேலை கிடைத்த பின் உடனடியாக ஐதராபாத் சென்று பெற்றோரை அழைத்து வர திட்டமிட்டிருந்தேன். அதேபோல் அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்கவும் நாங்கள் திட்டமிட்டு வந்தோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications