Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ!
தெஹ்ரான்: அமெரிக்காவுக்கு சொந்தமான எப் 18 போர் விமானத்தை சுட்டு தாக்கியதாக கூறியுள்ள ஈரான் ராணுவம் இது தொடர்பாக வீடியோவையும் வெளியிட்டுள்ளது. எனினும், விமானம் எங்கு வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டது, அதில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? விமானியின் கதி என்ன? என்பது தொடர்பான எந்த தகவலையும் ஈரான் வெளியிடவில்லை. அதே நேரத்தில் ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்கா உடனடியாக நிராகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவின் F-18 ரக போர் விமானம் ஒன்றை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது. எனினும், தாக்குதல் நடந்த இடம், விமானத்தில் ஏற்பட்ட சேதம் அல்லது விமானியின் நிலை குறித்த விரிவான தகவல்களை ஈரான் ராணுவம் உடனடியாக வெளியிடவில்லை.

அமெரிக்க F18 போர் விமானம்
எனினும், அமெரிக்க ராணுவம் ஈரானின் இந்த கூற்றை, உடனடியாக நிராகரித்தது. ஈரானிய அரசுடன் தொடர்புடைய 'பிரஸ் டிவி' மற்றும் மும்பையில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் 'எக்ஸ்' தளத்தில் காணொலி வெளியிடப்பட்டுள்ளது. அதில், வானில் பறக்கும் போர் விமானம் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. உடனே ஒளிக்கீற்றைகளுடன் அந்த விமானம் கட்டுப்பாடை இழந்து செல்கிறது.
அதிலிருந்து ஒரு விமானி குதிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.. தங்கள் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பால் அமெரிக்க F-18 ரக விமானம் தாக்கப்பட்டதாக ஈரான் தரப்பு கூறுகிறது. எனினும், இந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. அமெரிக்க F18 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறிய சில நிமிடங்களில், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) அதற்கு மறுப்பு தெரிவித்து, விளக்கம் ஒன்றை வெளியிட்டது.
சுட்டு வீழ்த்திய ஈரான்
இது தொடர்பாக செண்ட்காம் கூறுகையில், "ஈரானால் எந்தவொரு அமெரிக்க போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்கா, ஈரான்மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. அப்போது முதல், ஈரான் ராணுவம் இதுபோன்ற பல கூற்றுக்களை முன்வைத்துள்ளது.
உதாரணமாக, மார்ச் 5 அன்று, ஈரானின் தென்கிழக்கு பகுதிக்கு அருகே அமெரிக்காவின் F-18 'ஸ்ட்ரைக் ஈகிள்' ரக போர் விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் கூறியது. எனினும், அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தக் கூற்றை "ஆதாரமற்றது" என மறுத்து, எந்த அமெரிக்க போர் விமானமும் இழக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியது.
மேலும் பதற்றம்
இதேபோல், மார்ச் 19 அன்று, மத்திய ஈரானுக்கு மேலாக பறந்த அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் போர் விமானத்தை உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு தாக்கியதாகவும், விமானம் பலத்த சேதமடைந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும் ஈரான் கூறியது. இருப்பினும் , F-35 விமானம் அவசரமாக தரையிறங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக தற்காலிக போர் நிறுத்தத்தையும் போர் நிறுத்தத்தம் செய்வது தொடர்பாக 15 அம்ச திட்டத்தையும் அமெரிக்கா முன்வைத்துள்ளது. ஆனால், இதனை ஈரான் ஏற்க மறுத்துள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவம் வெளியிட்டு இருக்கக்கூடிய போர் பதற்றத்தை மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications