அமெரிக்காவில் பதுங்கிய "ஸ்லீப்பர் செல்கள்.." ஆக்டிவேட் செய்யும் ஈரான்? டிரம்பிற்கு பறந்த வார்னிங்
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையே 12 நாட்களாக நீடித்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. தாக்குதல்கள் முழுமையாக நின்றுவிட்டன. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் குறித்து டிரம்பிற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வந்தது. முதலில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. அப்படியே இரு நாடுகளும் மாறி மாறி தாக்கின. இதனால் நிலைமை மோசமானது. இந்தச் சூழலில் தான் அமெரிக்கா திடீரென இந்த மோதலில் உள்ளே வந்தது.

போர் முடிந்தது
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அணு சக்தி மையங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதலை நடத்தியது. அமெரிக்கா உள்ளே வந்தது நிலைமையை மோசமாக்கியது. இதையடுத்து நேற்றிரவு திடீரென கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இதனால் மோதல் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்பட்டது. ஆனால், சில மணி நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. போர் நிறுத்ததிற்கு அனைத்து தரப்பும் ஒப்புக்கொண்டன.
ஸ்லீப்பர் செல்கள்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரம்பிற்கு ஈரான் அனுப்பிய ஒரு எச்சரிக்கை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்கா தங்களைத் தாக்கினால் அமெரிக்காவிற்குள்ளேயே இருக்கும் ஸ்லீப்பர் செல்களை செயல்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஈரான் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பியுள்ளது..
அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே டிரம்பிற்கு ஈரான் இந்த எச்சரிக்கையை அனுப்பியுள்ளது. கடந்த ஜூன் 15 முதல் 17 வரையிலான நாட்களில் கனடாவில் ஜி7 மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்றபோது தான் டிரம்பிற்கு இந்த செய்தி தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
உலக நாடுகள்!
இருப்பினும், இது தொடர்பாக அமெரிக்கா அல்லது ஈரான் தூதரகங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் பகிரவில்லை. ஆனால் இதுபோன்ற மெசேஜ் டிரம்பிற்கு வந்தது உண்மை தான் என்றே வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அமெரிக்க ஊடகமான என்பிசிக்கு தெரிவித்துள்ளனர். மேலும், ஈரானுக்கு மத்திய கிழக்கைத் தாண்டி அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியங்களிலும் கூட தாக்குதல் நடத்தும் திறன் இருப்பதாகவே சர்வதேச நாடுகள் கருதுவதாகவும் அந்த எம்பிசி செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
மோதல் முடிவுக்கு வந்த போதும் அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க், வாஷிங்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள மத, கலாச்சார மற்றும் தூதரக கட்டிடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் அந்நாட்டு வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது..
இஸ்ரேல் ஈரான் மோதல் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் அந்த பிராந்தியத்தில் மெல்ல அமைதி திரும்பி வருகிறது. அதேநேரம் ஸ்லீப்பர் செல்கள் குறித்து ஈரான் கொடுத்த எச்சரிக்கையை அமெரிக்கா அசால்டாக கருதாது. அமெரிக்க உளவுப்படை சைலண்டாக இந்த விவகாரத்தைக் கண்காணிக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications