முன்னாள் அதிபரை கொல்ல சதி.. ‘பகீர்’ திட்டம் தீட்டியவர் கைது - FBI மூலம் சிக்கிய நபர் சொன்ன காரணம்!
வாஷிங்டன் (அமெரிக்கா) : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதித் திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈராக் மீது போர் தொடுத்ததற்காக, அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்வதற்கு தேவையான ஆயுதங்கள் வாங்குவது குறித்தும் அந்த நபர் விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிபரை கொல்ல சதி
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக 2000 முதல் 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ஜார்ஜ் புஷ். இந்நிலையில், ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ஈராக்கை சேர்ந்த ஷிகாப் அகமது ஷிகாப் (52) என்பவர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில், குடிபெயர்வோர் செய்யும் குற்றம், அமெரிக்க தலைவரை கொல்ல முயற்சி ஆகிய புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

விசிட்டிங் விசா
கைது செய்யப்பட்டுள்ள ஷிகாப் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசிட்டிங் விசாவில் அமெரிக்கா வந்துள்ளார். அவரது விசா காலம் காலாவதியானதை தொடர்ந்து 2021ம் ஆண்டு அடைக்கலம் கோரினார். கொலம்பஸ் பகுதியில் வசித்த ஷிகாப், FBI அமைப்புக்கு ரகசிய தகவல் அளிக்கும் நபரை தொடர்பு கொண்டு, ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்யும் சதி திட்டம் குறித்து விளக்கி உள்ளார்.

உயிரிழந்தவரின் உறவினர்
ஈராக் மீது போர் தொடுத்ததற்கும், அதனால் பலர் இறந்ததற்கும், மற்றும் அவர்கள் அகதிகளாக வெளியேறியதற்கும் காரணமாக இருந்ததால் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தான், அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபூபக்கர் அல் பாக்தாதியின் உறவினர் எனவும் கூறியதுடன், சதி திட்டத்தை நிறைவேற்ற மெக்சிகோ எல்லை வழியாக மேலும் 4 ஈராக்கியர்களை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆயுதங்கள்
அதில் இரண்டு பேர், ஈராக் உளவுப்பிரிவில் பணியாற்றியவர்கள். மற்றவர்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ளார். டல்லாஸ், டெக்சாஸ் பகுதிகளில் ஜார்ஜ் புஷ் தொடர்புடைய இடங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் கொலை செய்வதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் சீரூடைகள் வாங்குவது குறித்தும் விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

20 ஆண்டுகள் சிறை
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிரான சதியில் ஷிகாப் குடியேற்றக் குற்றச்சாட்டில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலைவரை கொல்ல திட்டம் தீட்டியது நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்று அமெரிக்க வழக்கறிஞர் தெரிவிரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications