டிரம்பிடம் இருந்து வந்த கால்.. வெள்ளை மாளிகைக்கு விரையும் இஸ்ரேல் பிரதமர்.. ஈரானுக்கு ஸ்கெட்ச்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் முதல் முதலாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்கிறார். இதுதொடர்பாக டிரம்பிடம் இருந்து நெதன்யாகுவிற்கு அழைப்பு சென்றுள்ளது. இருவரும் பிப்ரவரி 4ம் தேதி சந்தித்து பேச உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் தேதி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பங்கேற்ற உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் டொனால்ட் டிரம்ப்புக்கு எக்ஸ் வலைதள பக்கத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்தனர்.

டொனால்ட் டிரம்பம் அமெரிக்க அதிபராக பதவியேற்று இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. இன்னும் அவர் வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் தான் முதல் முதலாக ஒரு வெளிநாட்டு தலைவருக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த தலைவரின் பெயர் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவை பிப்ரவரி 4ம் தேதி வெள்ளை மாளிகைக்கு டொனால்ட் டிரம்ப் அழைத்துள்ளார். இருவரும் அன்றைய தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதன்மூலம் டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்கா செல்லும் முதல் தலைவர் நெதன்யாகு என்ற பெயரை பெற உள்ளார்.
இஸ்ரேல்,பாலஸ்தீனத்தின் காசா மீது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் தொடங்கியது. இந்த போர் ஓன்றரை ஆண்டுகள் நடந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் அதிபரானதும் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் பிராந்திய அமைதி மற்றும் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மத்திய கிழக்கு ஈரானால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு வளர்ந்து வரும் மிரட்டல் தொடர்பாக இருவரும் விவாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. காசா மீதான போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஈரான் வான் எல்லையில் நுழைந்து போர் விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இருநாடுகளுக்கு இடையே இப்போது மோதல் என்பது இருந்து வருகிறது.
அதேபோல் ஈரான் - அமெரிக்கா உறவு பற்றி நாம் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. இரு நாடுகளும் பல ஆண்டுகளாக எலியும், பூனையுமாக தான் உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இப்படி இருநாடுகளுக்கும் எதிராக உள்ள ஈரானுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் டொனால்ட் டிரம்ப் - பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
அதோடு ஜோ பைடனை விட டிரம்ப் ஈரான் மீது கடும் கோபத்தில் உள்ளார். இதனால் டிரம்பை மிரட்டும் வகையில் ஈரானும் பூமிக்கடியில் அமைத்துள்ள கடற்படை தளம், ராட்சத ட்ரோன் ‛காசா' உள்ளிட்டவற்றின் செயல்பாடு மற்றும் தாக்குதல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இதனால் மேலும் டிரம்ப் டென்ஷனாகி உள்ளார். இதனால் நிச்சயம் டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பின்போது ஈரான் விவகாரம் பற்றி இருதலைவர்களும் விவாதிக்கலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications