மோடிக்கு நன்றி! நிர்வாண ஊர்வலத்தால் பரபரத்த அமெரிக்க பாடகி! வாஷிங்டனில் காலில் விழுந்தாரே அவரே தான்
வாஷிங்டன்: மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா சென்றபோது பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கிய அந்நாட்டு பாடகி மேரி மில்பென் மணிப்பூர் குறித்து கருத்து தெரிவித்துள்ளதோடு பிரதமர் மோடியை பற்றி பெருமையாக கூறியுள்ளார்.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு குக்கி எனும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மலைப்பகுதியில் வசிக்கின்றனர். அதேபோல் மணிப்பூரில் சமவெளி பகுதியில் மைத்தேயி எனும் மக்கள் வசிக்கின்றனர்.

இந்நிலையில் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் கடந்த மே மாதம் 3ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறிப்போனது.
இந்த வன்முறையின் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 4ம் தேதி பைனோம் கிராமத்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்றது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையை உலுக்கி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மணிப்பூர் பாஜக ஆட்சியும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் வன்முறையை கட்டுப்படுத்துவதில் தவறியதாக அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் நேற்று முன்தினம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தால் கோபம் நிரம்பி இதயம் வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். இதனை சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது'' என தெரிவித்தார். இருப்பினும் மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது. நாடாளுமன்றத்தில் விவாதிக்ககோரியதால் கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது.
இந்நிலையில் தான் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றது பற்றி அமெரிக்காவின் பாடகி மேரி மில்பென் கருத்து தெரிவித்துள்ளார். இதில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்த அவர் பிரதமர் மோடிக்கு பெருமையுடன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேரி மில்பென் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛மணிப்பூரில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்காக என் மனம் வருந்துகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து பகிரங்கமாக பேசியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. அந்த பெண்கள் இந்தியாவின் மகள்கள் மட்டுமல்ல கடவுளின் குழந்தைகள். மனிதர்களாகிய நம் அனைவருக்கும் கண்ணியம் என்பது முக்கியம். அந்த பெண்களுக்காகவும், விரைவான நீதிக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூறியுள்ள மேரி மில்பென் இதற்கு முன்பு பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கியுள்ளார். அதாவது பிரதமர் மோடி கடந்த மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது வாஷிங்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் மேரி மில்பென் இந்திய தேசிய கீதத்தைப் பாடினார். அதன்பிறகு பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். இதுதொடர்பான வீடியோ அப்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications