மணிக்கு சுமார் 5 ஆயிரம் கி.மீ வேகத்தில் செல்லும் விமானம்? சாத்தியப்படுமா.. வேலையை தொடங்கிய நாசா
வாஷிங்டன்: ஒலியை விட நான்கு மடங்கு வேகம் அதாவது மணிக்கு சுமார் 5 ஆயிரம் கி. மீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய விமானத்தை வர்த்தக ரீதியில் கொண்டு வருவது சாத்தியமா? என்பதற்கான ஆய்வுகளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடங்கியுள்ளதாம்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி உள்பட பல எதிர்கால தொழில் நுட்பங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஒலியை விட நான்கு மடங்கு அதிவேகத்தில் செல்லும் விமானங்களை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் நாசா தனது இணையதளத்தில் இதுபற்றிய தகவலை வெளியிட்டு இருந்தது. அதில், மாக் 2 மற்றும் மாக் 4 எனப்படும் பரிசோதனை ஜெட் பற்றிய விவரங்களை பகிர்ந்து இருந்தது.

இந்த ஜெட் மணிக்கு 2,470 கி.மீட்டர் வேகத்தில் இருந்து 4,900 வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. அதாவது, ஒலியின் வேகத்தை விட நான்கு மடங்கு வேகம் கொண்டது. தற்போதைய பெரிய விமானங்களின் வேகம் மணிக்கு 600 மைல் (965 கி.மீட்டர்) வரை செல்கிறது. அதாவது ஒலியின் வேகத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதம் இதன் வேகம் ஆகும். இந்த விமானங்களை விட நான்கு மடங்கு அதிவேகத்தில் செல்லும் வகையிலான விமானங்களைதான் கமெர்ஷியல் ரூட்டுக்கு கொண்டு வருவது சாத்தியமா? என நாசா ஆய்வு நடத்துகிறது.
இது சாத்தியப்படுமானால், நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு வெறும் 1.5 மணி நேரத்தில் சென்று விட முடியும். அதாவது இரு நகரங்களுக்கு இடையேயான பயண தொலைவு 5,556 கி.மீட்டராக உள்ளது. இதை வெறும் 1.5 மணி நேரத்தில் சென்று விட முடியும் என்றால் நினைத்து பார்க்கவே பிரம்மிப்பாக உள்ளது அல்லவா... இதைத்தான் சாத்தியம் ஆக்க முடியுமா? என நாசா பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறதாம்.
X 59 என்று அழைக்கப்படும் அந்த விமானம் QuessT ( Quiet சூப்பர்சோனிக் தொழில்நுட்பம்) என்ற அடிப்படையில் இது இருக்கும் என்று நாசா தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, விமானங்களால் ஏற்படும் சோனிக் பூம் எனப்படும் சத்தத்தின் அளவு குறைவாக ஏற்படும் தொழில் நுட்பத்துடன் இது தயாரிக்கப்பட உள்ளது. ஏனெனில், ஒலியின் வேகத்தை விமானம் எட்டும் போது அதிக சத்தத்தை ஏற்படுத்தும்.
தரையில் இருப்பவர்களுக்கு இடி இடித்தது போல பெரிய சத்தமாக கேட்கும். ஆனால்,
X-59 தொழில் நுட்பத்தில் தம்ப் என்ற ஒரு சத்தம் அதாவது, காரின் டோரை சாத்துவது போல மட்டுமே ஒலியை எழுப்பும் எனவும் space.com தெரிவித்துள்ளது. இந்த விமானம் செல்வதற்கான சாத்தியமான பாதை என்பதையும் நாசா ஆய்வு செய்துள்ளது. நாசா கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்பாகவே இதுபோன்ற ஆய்வை மேற்கொண்டுள்ளது.
மாக் 1.6-1.8 என்ற விமானம் மூலமாக நாசா மேற்கொண்ட இந்த ஆய்வு மூலமாக ஒரு ரோட்மேப் கிடைத்தது. நாசாவின் ஆய்வுக்கும் இது உதவியது. தொழில்பயிற்சி முடிந்த பிறகு நாசாவின் அட்வான்ஸ்டு வாகன திட்டம் (AAVP) அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். அதாவது, டிசைன் மற்றும் தொழில்நுட்பம் யுக்திகள் உள்ளிட்டவற்றை நாசா பிற நிறுவனங்களுக்கு ஒப்பந்தமாக வழங்கும்.
எனினும், இது எல்லாம் எப்போது நடைபெறும் என்றோ.. கமர்ஷியல் ரூட்டில் இந்த அதிவேக விமானம் சாத்தியமா? என்பது பற்றி எல்லாம் தெளிவான விவரங்கள் கொடுக்கப்படவில்லை.. எது எப்படியோ வரும் காலத்தில் மின்னல் வேக பயணம் என்று சொல்வது எல்லாம் நிஜமாகிவிடும் என்றே சொல்லத்தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications