செவ்வாய் கிரகத்தில் "முக்கோண அமைப்பு.." பார்த்ததும் பதறிய ஆய்வாளர்கள்! ஆனால் கடைசியில் ட்விஸ்ட்
வாஷிங்டன்: செவ்வாய்க் கிரகம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நாசா ஆய்வாளர்கள், அந்த கிரகத்தின் மேற்பரப்பில் வெள்ளை நிற கூம்பு போன்ற அமைப்பு ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த பிரபஞ்சத்தில் பூமியைத் தாண்டி, வேறு எந்த கிரகங்களில் மனிதர்கள் வாழத் தகுதியான சூழல் இருக்கிறது என்பதைக் கண்டறியும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ ஏதுவான சூழல் இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாசா தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு சாட்டிலைட்களையும் நாசா அனுப்பி உள்ளது.

செவ்வாய் கிரகம்
அப்படி தான், கடந்த 2021இல் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா ராக்கெட் ஒன்றை அனுப்பி இருந்தது. செவ்வாய் கிரகத்தின் மேற்புறத்தை ஆய்வு செய்ய பெர்ஸெவேரன்ஸ் என்ற ரோவர் மூலம் Ingenuity helicopter என்ற ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டது. ஒராண்டிற்கும் மேலாக இந்த Ingenuity helicopter அங்குச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. எதிர்பார்த்ததை காட்டிலும் இந்த Ingenuity helicopter சிறப்பாகச் செயல்பட்டதால், இதன் திட்டம் பல முறை நீடிக்கப்பட்டது.

Ingenuity helicopter
இதுவரை 25 முறை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்த ஹெலிகாப்டர் 26ஆவது முறையாகச் சமீபத்தில் பயணித்தது. அப்போது அது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் முக்கோண வடிவில் அமைப்பு ஒன்றைக் கண்டுபிடித்தனர். வெள்ளை நிறத்தில் கூம்பு போன்ற வடிவில் இருந்த அந்த அமைப்பைக் கண்டு ஆய்வாளர்களே முதலில் குழம்பிவிட்டனர். பின்னர், அது என்னவென்று தெரிந்து பின்னரே ஆஸ்வாசம் அடைந்தனர்.

என்ன அது
இந்த வெள்ளை நிற கூம்பு போன்ற அமைப்பு வேறு எதுவும் இல்லை. Ingenuity helicopter மார்ஸில் தரையிறங்க உதவிய பெர்ஸெவேரன்ஸ் ரோவரின் மீத பாகங்கள் தான் இது என்பதை அதன் பின்னரே ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். செவ்வாய் கிரகத்தில் மிகக் கடுமையான வெப்பம் இருக்கும். முதலில் அந்த ரோவர் தரையிறங்கிய போது, இந்த பேக்ஷெல் தான் அதைப் பாதுகாத்தது. இந்த ரோவர் உள்ளே தான் இந்த ஹெலிகாப்டர் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே ஹெலிகாப்டரில் உள்ள கேமரா தான் இந்த கூம்பின் இமேஜை பதிவு செய்துள்ளது.

புதிய கண்டுபிடிப்பு
இது தொடர்பாக நாசாவின் Ingenuity helicopter அணியை லீட் செய்யும் டெடி ட்ஸானெடோஸ் கூறுகையில், "இது போன்ற பல்வேறு திட்டங்களைச் செய்யவே இந்த ஹெலிகாப்டர் திட்டத்தை நாசா நீட்டித்தது. ஒவ்வொரு முறையும் கிரகத்தின் மேற்பரப்பில் இந்த ஹெலிகாப்டர் பறக்கும் போதும், செவ்வாய் கிரகம் குறித்து பல்வேறு விஷங்களை நாங்கள் புதிதாகக் கண்டறிகிறோம். இத்தனை ஆண்டுகளாகச் செவ்வாய் கிரகம் குறித்து அறிய முடியாத தகவல்கள் இந்த ஒரே திட்டத்தின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது" என்றார்.

ஏன் முக்கியம்
இப்போது நாசா எடுத்துள்ள இந்த படம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த அமைப்பு தான் ஹெலிகாப்படரை பத்திரமாகத் தரையிறக்க உதவியது. அது இப்போது எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதன் மூலம், அடுத்து வரும் திட்டங்களில் செயற்கைக்கோள்கள் எப்படிப் பாதுகாப்பாகத் தரையிறக்க வேண்டும் என்பதை ஆய்வாளர்களால் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications