மனிதர்களை போல அறிவாளி ஏலியன்கள்.. பூமியை தாண்டி பல கிரகங்களில் இருக்கிறார்கள்! புதிய ஆய்வில் தகவல்
வாஷிங்டன்: இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் இருக்கும் என்பதைப் பல ஆய்வாளர்கள் நம்பவில்லை. பூமியைப் போலவே நிச்சயம் பல கிரகங்களில் மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் இருக்கும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும். இது தொடர்பாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மிக முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த பிரபஞ்சத்தில் நாம் கணக்கிடவே முடியாத அளவுக்குக் கிரகங்களும் சிறுகோள்களும் உள்ளன. அதில் பல மர்மங்களும் விடை அளிக்கவே முடியாத கேள்விகளும் உள்ளன.

மனிதர்கள் வாழ முடியுமா?
குறிப்பாகப் பிரபஞ்சத்தில் பூமியைப் போலவே நிச்சயம் வேறு கிரகங்களிலும் மனிதர்கள் உட்பட உயிரினங்களால் வாழ முடியுமா.. அப்படி வாழ முடிந்தால் அது எந்த கிரகம்.. அதில் இப்போது ஏலியன்கள் உள்ளதா என ஏகப்பட்ட கேள்விகள் இருக்கிறது. அதற்கான பதிலைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர். அப்படி நடந்த ஆய்வில் முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது வேறு கிரகங்களில் மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் வாழ்வது என்பது அரிதானது இல்லை, அது இயல்பான ஒன்று என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் பல கிரகங்களில் மனிதனைப் போன்ற உயிரினங்கள் இருக்கலாம் என்றும் பல நாகரிகங்களும் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மனிதர்கள் உட்பட எந்தவொரு உயிரினங்களும் உருவாவது கடினமான பரிமாண வளர்ச்சி இல்லை என்றும் அவை ஒரு கிரகத்தில் இயல்பாக நடக்கும் விஷயம் என்று கூறியுள்ளனர்.
பரிணாம வளர்ச்சி
இது தொடர்பாக ஆய்வாளர் ஜாசன் ரைட் கூறுகையில், "ஒரு கிரகத்தில் மனிதர்களைப் போன்ற அறிவார்ந்த உயிரினங்கள் உருவாவது அவ்வளவு கடினமானது எல்லாம் இல்லை. பரிணாம வளர்ச்சி என்பது தொடர்ச்சியான அசாத்தியமான நிகழ்வுகள் இல்லை. அவை எளிதாகக் கணிக்கக் கூடியவை தான். பூமி மட்டுமின்றி, பிரபஞ்சத்தின் பல பகுதிகளில் இந்த பரிணாம வளர்ச்சி நடக்கும்" என்றார்.
இதற்கு முன்பு வரை பரிணாம வளர்ச்சிக்கு 1983இல் இயற்பியலாளர் பிராண்டன் கார்ட்டர் முன்மொழிந்த ஆய்வு தான் அடிப்படையாகப் பார்க்கப்பட்டது. அதில் பரிணாம வளர்ச்சி என்பது சிக்கலான, மிகவும் அரிதான நிகழ்வுகளை உள்ளடக்கியது என்றும் இந்தளவுக்கு அரிய நிகழ்வுகள் மீண்டும் நடக்க வாய்ப்பில்லை என்பதால் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் மனிதர்களைப் போன்ற ஒரு உயிரினம் இருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டு இருந்தது.
இயல்பான ஒன்று
ஆனால், அதற்கு நேர்மாறான ஆய்வு முடிவுகளை தற்போதைய ஆராய்ச்சி தருகிறது. அதாவது பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாக நடக்கும் ஒன்று என்றும் எப்படி நடந்தாலும் பரிணாம வளர்ச்சியால் பிரபஞ்சத்தில் பல கிரகங்களை மனிதர்களைப் போல இருக்கும் ஏலியன்கள் இருக்க வாய்ப்புகள் மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. ஜாசன் ரைட் மேலும் கூறுகையில், "மனிதர்களைப் போன்ற அறிவார்ந்த உயிரினங்கள் தோன்ற அதிர்ஷ்டம் எல்லாம் தேவையில்லை என்பதே எங்கள் வாதம்.
பல கிரகங்களில் மனித குலம்
பூமியின் வரலாற்றில் மனிதர்கள் தொடக்கத்திலும் உருவாகவில்லை.. தாமதமாகவும் உருவாகவில்லை. அனைத்து சூழல்களும் சரியாக இருந்த நேரத்தில் மனித இனம் உருவானது. இதுபோல நிச்சயம் மற்ற கிரகங்களிலும் மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் இருக்கும். சூரியனின் பரிமாண வளர்ச்சியை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளோம்" என்றார். அதாவது பூமியைப் போலவே மற்ற பல கிரகங்களிலும் மனிதர்களைப் போன்ற அறிவார்ந்த ஏலியன்கள் இருப்பார்கள் என்பதே இந்த ஆய்வு முடிவாக உள்ளது.


Click it and Unblock the Notifications
