தமிழ்நாட்டில் வருகிறது ரெஸ்டோ பார்கள்.. பெங்களூர், ஹைதராபாத் ஸ்டைலில் மாற்றம்.. விஜய் கிரீன் சிக்னல்
சென்னை: ஊழல் புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான விரிவான திட்டத்தை முதல்வர் விஜய் அரசு வகுத்துள்ளது.
இந்த அரசு நிறுவனத்தில், முதற்கட்டமாக மது பாட்டில்களுக்கு MRP விலைக்கு மேல் கூடுதல் பணம் வசூலிக்கும் சட்டவிரோத நடைமுறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது விஜய் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக டாஸ்மாக் சீர்திருத்தம் அமைந்திருந்தது. முந்தைய அதிமுக, திமுக ஆட்சிக்காலங்களில் பாட்டிலுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் கோடி கணக்கில் முறைகேடான லாபம் ஈட்டப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது இந்த சட்டவிரோத வசூலைத் தடுக்க கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் உள்ள மொத்தம் 4,048 கடைகளில் சுமார் 1,500 முதல் 1,700 கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்கனவே முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மண்டலங்களில் இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கோவை மற்றும் மதுரை மண்டலங்களில் இன்னும் சில சவால்கள் நீடிக்கின்றன.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த முறைகேட்டை மாநிலம் முழுவதும் 100% ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ள அரசு, இதுவரை வாடிக்கையாளர்களிடம் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட தொகையைக் கொண்டு சமாளிக்கப்பட்ட கடை வாடகை மற்றும் மின்சாரக் கட்டணங்களை இனி அரசே ஏற்கும் என்றும் உறுதியளித்துள்ளது.
ரெஸ்ட்ரோ-பார் கலாச்சாரம்
தற்போது டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள சாதாரண பார்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, அண்டை மாநிலங்களைப் போல உணவகம் மற்றும் பார் வசதிகள் இணைந்த ரெஸ்ட்ரோ-பார் பாணி அமைப்புகளை அதிகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
வாட் வரி விதிப்பின் கீழ் இயங்கும் இந்த ரெஸ்ட்ரோ-பார்களுக்கு உரிமங்களை வழங்குவதன் மூலம், அரசுக்குக் கூடுதல் வருவாயை ஈட்ட டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களின் மாதிரிகளைப் பின்பற்றி, பல்வேறு நிறுவனங்களின் மது பிராண்டுகளைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தவும் அரசு உத்தேசித்துள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள 11 மதுபான உற்பத்தி ஆலைகளில் (Breweries) 8 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே டாஸ்மாக் கொள்முதல் செய்கிறது.
அதிலும் பெரும்பாலான கொள்முதல் வெறும் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பெறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் திராவிடக் கட்சிகளின் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. பெங்களூர் போன்ற நகரங்களில் கிடைப்பது போல, தங்களுக்குப் பிடித்தமான முன்னணி பிராண்டுகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை என்ற மக்களின் நீண்டகால குறையைப் போக்க அனைத்து பிராண்டுகளையும் கிடைக்கச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தனியார்மயமாக்கல் திட்டம்
டாஸ்மாக் கடைகள் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக இருப்பதையும், இளைஞர்களின் வாழ்க்கையைப் பாதிப்பதையும் தடுக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 கடைகளை விஜய் அரசு ஏற்கனவே மூடியுள்ளது. மேலும், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மது விற்பனையை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி, 2003க்கு முந்தைய மடலை பின்பற்றி தனியார்மயமாக்குவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மது விற்பனை எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க கலால் மற்றும் மதுவிலக்குத் துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications