கொரோனாவுடன் வேலைக்குச் சென்ற நபர்... 7 பேர் பலி... 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவல்?
வாஷிங்டன்: ஓரிகன் மாகாணத்தில் கொரோனா அறிகுறிகள் இருப்பதும் தெரிந்தும் வேலைக்குச் சென்ற ஒற்றை நபரின் அலட்சியப் போக்கு காரணமாக ஏழு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. கொரோனா வைரசின் தீவிரதன்மையை உணராமல் பொதுமக்கள் பல நிகழ்ச்சிகளை நடத்துவதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு
இந்நிலையில் தற்போது ஓரிகன் மாகாணத்தின் தெற்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு பெரிய கொரோனா பரவல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது, இதனால் பரவிய கொரோனாவால் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனா அச்சம் காரணமாக தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனாவை பரப்பிய ஒற்றை நபர்
அமெரிக்காவில் மற்ற இடங்களில் வைரஸ் பரவல் அதிகரிக்கக் காரணமாக இருந்ததைப் போல இங்கு எந்தவொரு பொது நிகழ்ச்சியும் நடக்கவில்லை. மாறாக, கொரோனா அறிகுறிகள் இருந்த நபர் தெரிந்தே வேலைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
ஓரிகன் மாகாணத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள இரண்டு பெரிய கொரோனா பரவல் சம்பவங்களுக்கும் இந்த நபரின் அலட்சிய செயலே காரணம் என்று அப்பகுதியிலுள்ள சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், "இந்த நபரின் செயல்பாட்டால் இரண்டு இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதில் ஒரு இடத்தில் ஏழு பேர் பலியாகியுள்ளனர். மற்றொரு இடத்தில் கொரோனா அச்சம் காரணமாக 300க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவரது செயல் நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்தனர்.

ஓரிகனில் கொரோனா பாதிப்பு
அமெரிக்காவின் வட மேற்கு மாகாணங்களில் ஒன்றான ஓரிகானில் இதுவரை 1,03,755 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,347 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதலே ஓரினகனில் தினசரி கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், ஓரிகன் மாகாணத்தில் இருக்கும் 29 பகுதிகள் "தீவிர ஆபத்தில்" இருப்பதாக அரசு அறிவித்தது.

கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம்
ஓரிகன் மாகாணத்தில் தற்போது ஜனநாயகக் கட்சியின் கேட் பிரவுன் ஆளுநராக உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதமே மாநில அவசரக்கால உத்தரவைப் பிறப்பித்தார். அதன் பின்னர் ஹோட்டல்களுக்கும், பெரிய கூட்டங்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க்குகளை அணிய வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், ஆளுநரின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

வீட்டிலிருந்து வேலை
ஓரிகன் மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதலே பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்ததால் பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களை பணிக்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளது. ஆனால், இது போன்ற சம்பவங்களால்தான் கொரோனா பரவுவதாகத் தெரிவித்துள்ள ஓரிகன் மாநில அரசு, முடிந்தவரை ஊழியர்களை வீட்டிலிருந்த வேலை செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications