90s கிட்ஸுக்கு குட் நியூஸ்! புளூட்டோ கிரகம் குறித்து.. நாசா சொன்ன மேட்டர்!
வாஷிங்டன்: 90s கிட்ஸ் பலரும் பள்ளி படித்த காலத்தில், புளூட்டோவை 9வது கிரகமாக படித்திருப்பார்கள். ஆனால், இடையில் புளூட்டோவை கிரகங்கள் லிஸ்ட்டிலிருந்து தூக்கிவிட்டார்கள். இந்நிலையில் மீண்டும் கிரகங்களின் லிஸ்ட்டில் இதை சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக நாசா தெரிவித்திருக்கிறது.
சூரியவம்சம் படத்தில், போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது, "என்ற குடும்பத்துல.. எல்லாரும் வந்தாச்சு" என்று விஜயகுமார் சொல்லுவாரே.. அதுபோல புளூட்டோ இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதற்கு ஒரு நீதி கிடைத்திருப்பதாக, நெட்டிசன்கள் சோஷியல் மீடியாக்களில் நெகிழ்ந்து வருகின்றனர்.

புளூட்டோவின் கதை
சூரிய குடும்பத்தில் மொத்தம் 9 கோள்கள் என்றுதான் நாம் படித்திருந்தோம். இடையில்தான் புளூட்டோவை நீக்கிவிட்டார்கள். வானத்தில் ஏகப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. இதில் எது விண்கல், எது நட்சத்திரம்? எது கோள்கள்? என்று பிரித்து பார்க்க, சில நிபந்தனைகளை சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) வைத்திருக்கிறது.
உதாரணமாக கோள் எனில், உருண்டையாக இருக்க வேண்டும். சூரியனை சுற்றி வர வேண்டும். அதன் பாதையில் வேறு எதுவும் இருக்க கூடாது போன்ற 3 நிபந்தனைகள் இருக்கின்றன.
தகுதியை இழந்த புளூட்டோ
ஆரம்ப காலத்தில் புளூட்டோ, இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக பலரும் நினைத்தனர். ஆனால், அடுத்தடுத்த ஆய்வுகளில் புளூட்டோ 3வது நிபந்தனையை மட்டும் பின்பற்றவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2006ம் ஆண்டு IAU அமைப்பின் பொதுக்குழு கூட்டம், செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் நடைபெற்றபோது, புளுட்டோ குறித்து பஞ்சாயத்துகள் கிளப்பப்பட்டன. பிரச்சனை பெரியதாக வெடித்த நிலையில், அந்த கூட்டத்தில் வைத்து, புளூட்டோவை தகுதி நீக்கம் செய்தார்கள் விஞ்ஞானிகள்.

90s கிட்ஸ்கள்
அப்போது முதல், நமக்கு மொத்தம் 8 கிரகங்கள்தான் என்று புத்தகங்கள் வெளியாகின. வேறு வழியின்றி பலரும் புளூட்டோவை கைவிட்டு மனதை தேற்றிக்கொண்டார்கள். இருப்பினும், 90s கிட்ஸ்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விண்வெளி குறித்து கதை சொல்லும்போதெல்லாம் புளூட்டோவையும் ஒரு கோளாக சொல்லி வைப்பார்கள். நம்மூரில் கூட, "9 கோள்களை ஒன்றாய் காண.." பாடல் இருக்கிறது. இதுவும் புளூட்டோவை மனதில் வைத்துதான் எழுதப்பட்டிருக்கிறது.
சிறுமியின் கடிதம்
இப்படியாக தலைமுறை தலைமுறையாக புளூட்டோ குறித்த பேச்சுக்கள் மக்களிடையே தீவிரமடைந்தன. இந்நிலையில், கயேலா எனும் 10 வயது சிறுமி ஒருவர், புளூட்டோவை மீண்டும் கோள்கள் லிஸ்டில் சேர்க்க வேண்டும் என்று நாசாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தனது பெற்றோர் சிறு வயதிலிருந்து 9 கிரகம் என்று சொல்லி வளர்த்ததாகவும், ஆனால் இடையில் 8 கிரகம் என்று மாற்றி சொன்னதாகவும், இதனால் புளூட்டோவை இழக்க விரும்பவில்லை என்றும் தனக்கே உரிய மழலை மொழியில் கடிதம் எழுதியிருக்கிறார்.
நாசா நிர்வாகி
இந்த லெட்டர் சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவ, நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் கண்ணிலும் பட்டிருக்கிறது. அவர், இந்த கடிதத்திற்கு, "கயேலா, நாங்கள் இதை கவனித்து வருகிறோம்" என்று ரிப்ளே கொடுத்திருக்கிறார். அப்படியெனில் விரைவில் புளூட்டோவை சேர்த்துக்கொள்ள நாசா முடிவெடுக்கலாம் என்று பேச்சுக்கள் அடிப்பட்டிருக்கின்றன. கடைசியில் 90s கிட்ஸால் செய்ய முடியாததை, 90s கிட்ஸ் பெற்றெடுத்த குழந்தை செய்து காட்டியிருக்கிறது என்று, கயலா சோஷியல் மீடியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications