மோசமான முடிவை தரும்.. அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த போப் பிரான்சிஸ்
வாஷிங்டன்: சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை டிரம்ப் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் டிரம்பின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். டிரம்பின் செயல்பாடு மோசமான முடிவுகளை தரும் என்றும் சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியை நிறுத்தியது, உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது என பல உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்து வருகிறார். தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன் எனப்பேசி வந்த டிரம்ப், அதிபராக பொறுப்பேற்ற உடன் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்.

டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள், அந்த நாட்டில் முறையான ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கி உள்ளவர்களின் பட்டியல் தயார் செய்து வருகிறது. அந்த லிஸ்டில் உள்ளவர்களை நாடு கடத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அடையாளம் காணப்பட்டு ராணுவ விமானங்கள் மூலம் அவரவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
அந்த வகையில் கடந்த சில நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவுதமலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்களையும் வெளியேற்றும் பணியையும் அமெரிக்கா தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பேராயர்களுக்கு இது தொடர்பாக போப் பிரான்சிஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ''சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக வலுக்கட்டாயமாக மக்களை வெளியேற்றுவது அவர்களது கண்ணியத்தை பறிப்பதாக உள்ளது.
இது, மோசமான முடிவை தரும்" என்று குறிப்பிட்டுள்ளார். போர், வறுமை உள்ளிட்ட காரணங்களால் சொந்த நாட்டை விட்டு தப்பி ஓடும் மக்களை எல்லா நாடுகளும் அரவணைக்க வேண்டும் என்ற கருத்தை போப் ஆண்டவர் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் நிலையில்தான் டிரம்பின் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications