அமெரிக்காவில் குவாட் கூட்டமைப்பு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.. ஏன் முக்கியம்?
வாஷிங்டன்: 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நடந்த குவாட் கூட்டமைப்பில் பங்கேற்று உரையாற்றினார். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த கூட்டமைப்பில் பல்வேறு தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. அமெரிக்க தேர்தல் பரபரப்புக்கு இடையே, பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா சென்றார். மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வில்மிங்டன் நகரத்தில் இந்த குவாட் கூட்டமைப்பு நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான இங்கு இந்த மாநாட்டை அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். குவாட் கூட்டமைப்பு தொடங்கியதும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. குவாட் கூட்டமைப்பில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, "இந்த கூட்டமைப்பு எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. பாதுகாப்பு இறையாண்மை, அனைத்து பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு ஆகியவற்றுக்கான கூட்டமைப்பு இதுவாகும்.
உலகம் முழுவதும் பதற்றம், மோதல்களுக்கு நடுவே குவாட் கூட்டமைப்பு நடக்கிறது. இத்தகைய தருணத்தில் குவாட் கூட்டமைப்பு ஜனநாயக மதிப்புகளின் படி ஒருங்கிணைந்து செயல்படுவது ஒட்டுமொத்த மனித உலகத்திற்கும் மிக முக்கியமானது. அடுத்த ஆண்டுக்கான குவாட் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பிரதமர் மோடி கூறினார்.
சர்வதேச அளவில் போர் பதற்றம், மோதல்கள் பிரச்சனை உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் இந்த ஆலோசனை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய பெருங்கடலில் சீனா இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருந்து வரும் நிலையில், ஆஸ்திரெலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடன் இந்த ஆலோசனை நடப்பது பிராந்திய அளவில் மிக கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். உலகலாவிய பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு ட்விட் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என்று கூறியிருந்தார். இதேபோன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், "இந்தியா உடனான அமெரிக்க உறவு வலுவானதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேசுகிறோம் " என்றார்.
ஐநா பொதுச்சபையில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் 'எதிர்கால உச்சி மாநாடு 2024' என்கிற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மோடியின் இந்த அமெரிக்க பயணத்தின் போது அவரை தான் சந்திக்க உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் இவ்வாறு கூறினார். ஆனால் இந்த சந்திப்பு எங்கே நடைபெறும்? எப்போது நடைபெறும்? என்ற எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், "மோடியை சந்திக்க போவதாக டிரம்ப் கூறிய தகவலை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. மோடிக்கு பலருடன் சந்திப்பு உள்ளது" என மழுப்பலான பதிலை சொல்லிவிட்டது. டொனால்டு டிரம்ப் - மோடி இடையேயான சந்திப்பு கடைசியாக 2020ல் நடைபெற்றது. டிரம்ப் இந்தியா வந்திருந்த போது இந்த சந்திப்பு நடைபெற்றது நினைவு கொள்ளத்தக்கது.












Click it and Unblock the Notifications